வேகத்துக்கு தடை! 462 இடங்களில் அமைக்க புதிய திட்டம்; விபத்தை கட்டுப்படுத்த போலீஸ் முயற்சி

தினமலர்  தினமலர்
வேகத்துக்கு தடை! 462 இடங்களில் அமைக்க புதிய திட்டம்; விபத்தை கட்டுப்படுத்த போலீஸ் முயற்சி

திருப்பூர் : திருப்பூரில், வாகன விபத்துகளை கட்டுப்படுத்த, 'கட்' ரோடுகளில், 462 இடங்களில் வேகத்தடை அமைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
'டாலர் சிட்டி' என்று அழைக்கப்படும் திருப்பூர் பின்னலாடை தொழிலில், தலை நிமிர்ந்து நின்றாலும், உள்கட்டமைப்பு வசதியில் பின்தங்கியுள்ளது. திருப்பூரில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை போலவே, சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. போதுமான ரோடு வசதி இல்லாதது; போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது; மதுபோதையிலும், அதிவேகத்திலும் வாகனம் ஓட்டுவது உட்பட பல் வேறு காரணங்களால், விபத்து நிகழ்ந்து உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. இதனால், பல குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன.

அனைத்து இடங்களிலும் போலீசாரை நியமிப்பது என்பது சாத்திய மற்றது. எனவே, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். போதையில், அதிவேகத்தில் ஓட்டுவோர், விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கின்றனர். ஆனால், விபத்தை குறைப்பது என்பது போலீசாருக்கு பெரிய சாவலாக இருந்து வருகிறது.

மாதம் மூன்று; விபத்து 26:


திருப்பூர் 'சிட்டி' போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 26 விபத்து நடந்தது. அதில் சில விபத்து, கவனக்குறைவால் நடந்துள்ளதும், குறுக்கு ரோட்டிலிருந்து, கவனக்குறைவாக மெயின் ரோட்டுக்கு வரும் போது ஏற்பட்டதும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால், விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, குறுக்கு ரோட்டிலிருந்து மெயின் ரோடு இணையும் பகுதிக்கு முன்னதாக வேகத்தடை அமைக்க போலீசார் முடிவு செய்தனர். இதுகுறித்து, ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் நாகராஜன், விபத்தை தடுக்கும் முயற்சியாக, வேகத்தடை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது குறித்து, உதவி கமிஷனர் ராஜ் கண்ணா, விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, எந்ததெந்த இடங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, அப்பகுதியில் வாகன போக்குவரத்து எப்படி உள்ளது என்ற முறையில் ஆய்வு மேற்கொண்டார்.

462 இடத்தில் வேகத்தடை:


அதில், மெயின் ரோட்டை சந்திக்கும், குறுக்கு ரோடுகளின் விவரம் குறித்த பட்டியலை போலீசார் தயாரித்துள்ளார். அதில், அவிநாசி ரோட்டில் - 35; பி.என்., ரோடு - 67, ஊத்துக்குளி ரோடு - 28, காலேஜ் ரோடு - 32, மங்கலம் - அவிநாசி ரோடு, 9; மங்கலம் ரோடு - 55, பல்லடம் ரோடு - 51, தாராபுரம் ரோடு - 106 மற்றும் காங்கயம் ரோடு - 79 என மொத்தம், 462 இடங்களை கண்டறிந்துள்ளனர். நெடுஞ்சாலை துறை, மாநகராட்சியை எதிர்பார்க்காமல், போலீசார் களமிறங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, பி.என்., ரோடு கணக்கம்பாளையம் முதல் புஷ்பா தியேட்டர் வரை உள்ள, குறுக்கு ரோடுகளில், 'ஸ்பான்ஸர்' பெற்று, 67 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கமிஷனர் நாகராஜனிடம் கேட்டபோது, ''திருப்பூர் நகரில், விபத்தை கட்டுப்படுத்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளோம். வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த, 'கட்' ரோடுகளில், மொத்தம், 462 இடங்களில், வேகத்தடை ஏற்படுத்துகிறோம்.
குறிப்பாக, 171 இடத்தில் வேகத்தடை அமைத்து தர மாநகராட்சி முன்வந்துள்ளனர். இப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. போலீசார் என்னதான் முயற்சி எடுத்தாலும், 'அவரவர் உயிருக்கு அவரவர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும்,'' என்றார்.

மூலக்கதை