அதிர்ச்சி! வேலை செய்யாமல் தடுப்பணை; வெற்று கல்வெட்டினால் வேதனை

தினமலர்  தினமலர்
அதிர்ச்சி! வேலை செய்யாமல் தடுப்பணை; வெற்று கல்வெட்டினால் வேதனை

உடுமலை : உடுமலை அருகே, குடிமங்கலத்தில் வேலை செய்யாமலேயே, தடுப்பணை மேம்படுத்தப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ள வெற்று கல்வெட்டினால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளில், 90க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 2017 - 18ம் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளிலுள்ள தடுப்பணை மேம்படுத்துதல், குளம், குட்டைகள் சீரமைத்தல், பொது இடங்களில் மரக்கன்றுகள் வைத்தல், இயற்கை உரத்தொட்டி அமைத்து மண்புழு உரம் உற்பத்தி மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு திட்டங்கள் நடந்து வந்தன.

இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவதால், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைகளுக்கு, கல்வெட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மேம்பாடு எங்கே?
அதன்படி, குடிமங்கலம் ஊராட்சி, முத்துசமுத்திரம் செல்லும் வழியில், 16.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை மேம்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பணை பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்த நிலையிலே தற்போதும் காட்சியளிக்கிறது.பணிகள் மேற்கொள்ளாமலேயே மேம்படுத்தப்பட்டுள்ளதாக, வெற்று கல்வெட்டு மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தடுப்பணை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட, 16.15 லட்சம் ரூபாய் நிதி எங்கே சென்றது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுபோன்று, திட்டங்களை செயல்படுத்தாமல், மக்களை ஏமாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்:
பொதுமக்கள் கூறுகையில், 'இங்கு மட்டும் தான் இதுபோல், வெற்று கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதா, அனைத்து பகுதிகளிலும் வேலைகள் மேற்கொள்ளப்படாமல் கல்வெட்டுடன் பணியை ஒன்றிய நிர்வாகம் முடித்துவிட்டதா என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும்' என்றனர்.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்த போதிலும், கிராமங்களுக்கும், மக்களுக்கும் சென்றுசேராத நிலையே காணப்படுகிறது.

மூலக்கதை