இந்திரா நகர் தரைப்பாலத்துக்கு கிடைத்தது விடிவு! அடையாற்றில் திறக்கப்பட்டது புதிய பாலம்

தினமலர்  தினமலர்
இந்திரா நகர் தரைப்பாலத்துக்கு கிடைத்தது விடிவு! அடையாற்றில் திறக்கப்பட்டது புதிய பாலம்

அடையாறு ஆற்றின் குறுக்கே, கவுல்பஜார், இந்திராநகர் தரைப்பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட, புதிய பாலத்தை, மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதனால், மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன், பல ஆண்டு கால பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.சென்னை, பல்லாவரத்தை அடுத்த கவுல்பஜார் பகுதியில், தரப்பாக்கத்தையும் - கவுல்பஜாரையும் இணைக்கும் வகையில், அடையாற்றின் குறுக்கே, இந்திரா நகர் தரைப்பாலம் இருந்தது.
கனரக வாகனங்கள்பல்லாவரம், பம்மல், பொழிச்சலுார், கவுல்பஜார், போரூர், மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் பகுதிக மக்கள், இந்த தரைப்பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தினர். பள்ளி, கல்லுாரி வாகனங்களும், கனரக வாகனங்களும் அதிகமாக சென்று வந்தன.லேசான மழைக்கே, அடையாற்றில் செல்லும் உபரி நீரால், இந்த தரைப்பாலம் மூழ்கிவிடும். இதில், வாகனங்களும், பாதசாரிகளும், ஆபத்தாகவே ஆற்றை கடந்து செல்வர்.
தரைப்பாலம்
செம்பரம்பாக்கம் ஏரி உட்பட, ஏரிகள் திறக்கப்பட்டால், அடையாற்றில் பெரு வெள்ளம் ஏற்படும். அப்போது, கவுல்பஜார் தரைப்பாலத்தை கடப்பது மிகவும் ஆபத்தாகும்.நாள் கணக்கில் செல்லும் இந்த வெள்ளத்தால், போக்குவரத்து முற்றிலும் முடங்கும். ஆற்றின் இருபக்க கரைகளில் இருப்பவர்கள், மறுபக்கத்திற்கு செல்ல, பல கி.மீ., துாரம் சுற்றிச் சென்று வந்தனர்.தொடர்ந்து, இந்த தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றதால், கடந்த சில ஆண்டுகளாகவே, தரைப்பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கடந்த 2015 வெள்ளத்தில், முற்றிலும் உடைந்தது.
இதனால், இவ்வழியாக போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து, நமது நாளிதழிலும் சுட்டிக்காட்டி, செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, கவுல்பஜார், இந்திரா நகர் தரைப்பாலத்தை, புதுப்பித்து, உயர்த்தப்பட்ட பாலமாக கட்ட, அரசு உத்தரவிட்டது.கெருகம்பாக்கம் ஊராட்சி, குன்றத்துார் ஊராட்சி ஒன்றியம், ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், மானிய நிதிக்குழு ஆகியவற்றின் மூலம் நிதி பெறப்பட்டு, 58 லட்சம் ரூபாய் செலவில், இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த டிசம்பரில் துவங்கிய இப்பணி, மூன்று மாதங்களில் முடிந்துள்ளது. இந்த புதிய பாலம், 80 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது.
ஒருவழிப் பாதை பாலமாக, ஆற்றின் தரைமட்டத்தில் இருந்து, 18 அடி உயரத்தில், இப்பாலம் அமைந்துள்ளது. மொத்தம், 30 பில்லர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த புதிய பாலத்தில், கனரக வாகனங்கள் செல்லலாம் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரபூர்வமாக பாலத்தை திறந்து வைக்காத நிலையில், மக்கள் பாலத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.விரைவில் வருகிறது
மேம்பாலம்!

அடையாற்றில் ஏற்பட்ட, 2015 வெள்ளத்தை போல, மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டால், தற்போதைய பாலமும், அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிக வெள்ளத்தையும் தாங்கும் அளவிற்கு, பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நீரோட்டத்தால், பில்லர்களோ, கைப்பிடி சுவரோ சேதமடைய வாய்ப்பில்லை என்றும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக வாகனங்கள், இந்த பாலத்தை பயன்படுத்துவதால், இங்கு மேம்பாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிக்கப்பட்டு உள்ளன. அரசாணை வெளியானதும், மேம்பால கட்டுமான பணிகள் துவங்கும் என்றும், தற்போதைய பாலம், குறைந்த செலவில், ஒரு மாற்று ஏற்பாடு தான் என்றும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை