அஞ்சாமல் நடக்குது கஞ்சா விற்பனை! ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தல் அமோகம்...

தினமலர்  தினமலர்
அஞ்சாமல் நடக்குது கஞ்சா விற்பனை! ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தல் அமோகம்...

ஆந்திராவில் இருந்து ரயில்களில் கடத்தி வரப்படும் கஞ்சா, சொகுசு கார்கள் மூலமாக, கோவையில் வினியோகிக்கப்பட்டு, கல்லுாரி மாணவர்களிடம் ஜோராக விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மாநகரிலும், புறநகரிலும், சமீபகாலமாக கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறந்து வருகிறது. கல்லுாரி மாணவர்கள், சிறை கைதிகள், வடமாநில தொழிலாளர்கள், ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்கள் என பல தரப்பினரையும், போதைக்கு அடிமையாக்கி, கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.

ஆந்திராவிலிருந்து கோவைக்கு வரும் பல்வேறு ரயில்களிலும், கிலோக்கணக்கில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து ஈரோடு வரை, சரக்கு பண்டல்களில் கஞ்சா கடத்தி வரும் கும்பல், அங்கிருந்து 'பென்ஸ், ஆடி' போன்ற சொகுசு கார்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களிலும் கோவைக்கு கடத்தி வருவதை போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

சமீபத்தில் கோவையில், 200 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர், 'குவாலிஸ்' காரில் சிக்கியது, இதை உறுதிப் படுத்தியுள்ளது.ஆனால், சிக்கியது சில கார்கள் மட்டுமே. பெரும்பாலான கார்கள், கோவை மாநகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில், 'நெட்வொர்க்' அமைத்து, கஞ்சாவை தொடர்ந்து வினியோகித்து வருகின்றன.

குறிப்பாக, கோவை நகரில், சில கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், உச்சத்தைஎட்டியுள்ளது.மாநகரின் மத்தியிலுள்ள ஒரு கல்லுாரி விடுதியில், மாணவர்கள் கும்பலாக கஞ்சா குடிக்கும் 'வீடியோ', மாணவர்களிடையே வலம் வருகிறது. அவிநாசி ரோட்டிலுள்ள அரசு கல்வி நிறுவன வளாகத்தின் பின்புறத்தில், பகல் நேரத்திலேயே, கஞ்சா குடித்து, மயங்கிக் கிடக்கும் மாணவர்களைப் பார்க்க முடிகிறது.

கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கஞ்சா வழக்கில் கைதானவர்களிடம் இருந்து, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு, ஒரு டன் இருக்கும் என்றாலும், இது புழக்கத்திலுள்ளகஞ்சாவில் 10 சதவீதம் கூட இருக்காது என்று கூறப்படுகிறது. மனித நேயமே இல்லாத சில போலீசார், கஞ்சா வியாபாரிகளுடன் கைகோர்த்திருப்பதையும் மறுக்க முடியாது. இவர்களால், ஏராளமான கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது. கஞ்சா விஷயத்தில், போலீஸ் கமிஷனர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கோவை மாநகரை போதையின் பிடியிலிருந்து மீட்க முடியும்.

வியாபாரிகளாகும் மாணவர்கள்!


ஆந்திராவில் ஒரு கிலோ கஞ்சா, ரூ.4,000க்கு கிடைக்கிறது. இதை, ரூ.10 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகள் வாங்கி, ரயில், கார்களில் கடத்தி வந்து, 10 - 15 கிராம் பாக்கெட்களாக மாற்றி, ஒரு பாக்கெட்டை, 150 - 180 ரூபாய் வரைவிற்கின்றனர். இதன் மூலம் ஒரு கிலோ கஞ்சாவுக்கு, 15 - 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். ஒரு சில மாணவர்களே, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.


-நமது நிருபர்-

மூலக்கதை