கொதிக்கும் சூரியனில் உதிக்குமா 'உங்கள் பெயர்'

தினமலர்  தினமலர்
கொதிக்கும் சூரியனில் உதிக்குமா உங்கள் பெயர்

சூரியனுக்கு உங்களது பெயர் செல்வதற்கான வாய்ப்பை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) வழங்கியுள்ளது.

உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளுடன் முன்னணியில் இருப்பது நாசா. தற்போது முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்வதற்கு 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை வரும் ஜூலை/ஆகஸ்டில் அனுப்ப உள்ளது. இது சூரியனைப் பற்றிய விஞ்ஞானிகளின் 60 ஆண்டு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, அனுப்பப்படுகிறது. விண்கலத்தில் ஒரு 'மைக்ரோ சிப் மெமரி' இடம் பெற்றிருக்கும். உலகளவில் மக்கள் அனுப்பும் பெயர்கள் இதில் பதிவு செய்யப்படும்.

எப்படி சேர்ப்பது


விருப்பமுள்ளவர்கள் http://parkersolarprobe.jhuapl.edu/The-Mission/Name-to-Sun என்ற இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கன்பர்மேஷன், உங்களது இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான கடைசி தேதிஏப்., 27, 2018.

சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமி உள்ளிட்ட எட்டு கோள்கள் உள்ளன. இதன் ஈர்ப்பு விசையில் தான், பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. சூரியனின் காற்று மண்டலம்?, சூரியனின் மேற்பரப்பை விட, அதன் வளிமண்டலம் ஏன் வெப்பம் மிகுந்ததாக இருக்கிறது? சூரியனின் மேற்பரப்பு 'போட்டோஸ்பியர்' என்று ஏன் அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு இந்த விண்கலம் விடையளிக்கும்.

பெயர் மாற்றம்இதற்கு முதலில் 'சோலார் புரோப் பிளஸ்' என பெயரிடப்பட்டிருந்தது. பின் அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு 'பார்கர் சோலார் ப்ரோப்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நாசா தனது விண்கலத்துக்கு, வாழும் ஒருவரின் பெயரை வைப்பது இதுவே முதல்முறை. 60 ஆண்டுகளுக்கு முன், சூரியக்காற்றை கண்டுபிடித்து உலகிற்கு தெரிவித்தவர் யூஜின் பார்கர். மேலும் சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள், தங்கள் ஆற்றலை விட்டுக்கொடுக்கின்றன எனவும் தன் ஆய்வில் தெரிவித்தார்.


சூரிய ஒளி, பூமியை வந்தடைவதற்கு 8 நிமிடங்கள் ஆகும்.


இந்த விண்கலம் வரும் ஜூலை 31 - ஆக., 19க்குள், புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும். 2024ல் சூரியனின் வளிமண்டலத்தை சென்றடையும்.
விண்கலத்தின் எடை 612 கிலோ நீளம்: 9 அடி 10 இன்ச்
சூரியன் - பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ.
இது 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து, 59.5 லட்சம் கி.மீ., துாரத்தில் நின்று ஆய்வில் ஈடுபடும். இதுவரை எந்த விண்கலமும், இந்த துாரத்தை எட்டியதில்லை.
சூரியனின் வெப்பத்தில் இருந்து, விண்கலத்தை பாதுகாக்கும் விதமாக கார்பனால் ஆன தெர்மல் கவசம் (8 அடி விட்டம், 4.5 இன்ச் தடிமன்) பொருத்தப்பட்டுள்ளது.


இது ஒரு சிறிய கார் வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. விண்கலம், பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களையும் ஆய்வுக்காக சுமந்து செல்லும்.
இது மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த வேகத்தில் வாஷிங்டனில் இருந்து டோக்கியோவுக்கு ஒரு நிமிடத்தில் சென்று விடலாம்.

மூலக்கதை