பழவேற்காடு கடைகள் மீனவ கிராமங்களுக்கு ஒதுக்கப்படுமா?ஏல முறையை தவிர்க்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்

பழவேற்காடு;பழவேற்காட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் கடைகளை, ஏலம் முறையை தவிர்த்து, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ கிராமங்களின், பயன்பாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, மேற்கண்ட மீனவ கிராமங்கள் சார்பில், நேற்று, ஆலோசனை கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழவேற்காடு கடல் மற்றும் ஏரியில் பிடித்து வரப்படும் மீன்கள், அங்குள்ள இறங்குதளத்திற்கு கொண்டு வரப்பட்டு, மொத்த விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன.மீன் இறங்கு தளம் பகுதியில், மீன் விற்பனை கூடம் மற்றும் கடைகள் அமைத்து தர வேண்டும் என, மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதன் பயனாக, மீன்வள துறை மூலம், இரண்டு கோடி ரூபாய் நிதியில், மீன் இறங்கு தளம் பகுதியில், மீன் அங்காடிக்கான கட்டுமான பணிகள், கடந்த ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
அங்காடி அமையும் பகுதியில், 24 கடைகள், அதை ஒட்டி, 450 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலைகள், 210 மீ., நீளத்திற்கு கான்கிரீட் சரிவுகள், விற்பனை செய்வதற்காக இருக்கைகளுடன்கூடிய மேடைகள், இருபாலர் கழிப்பறைகள் கட்டுமான பணிகள், நடைபெற்று வருகின்றன.பழவேற்காடு, கோட்டைகுப்பம், தாங்கல் பெரும்புலம், லைட்அவுஸ்குப்பம் ஆகிய நான்கு ஊராட்சிகளில், 35க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள், கடல் மற்றும் ஏரியில், மீன்பிடி தொழிலில் நேரிடையாக ஈடுபட்டுள்ளன.
மீன் இறங்குதளம் பகுதியில் அமைக்கப்படும், 24 கடைகளை, மீன் வள துறை மூலம் ஏலம் விட்டு, வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இதையறிந்த மீனவர்கள், மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்யவும், இரவு நேரங்களில் கொண்டு வரும் மீன்களை பாதுகாத்து வைக்கவும் பயன்படும் வகையில், நான்கு கிராமத்திற்கும் ஒரு கடை ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக, மேற்கண்ட மீனவ கிராமங்கள் சார்பில், நேற்று, ஆலோசனை கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதில், 'பழவேற்காடு பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகளில், தாங்கல் பெரும்புலம், கலங்கரைவிளக்கம், கோட்டைகுப்பம், பழவேற்காடு ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு, தலா, ஒரு கட்டடம் ஒதுக்கி தர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மேற்கண்ட தீர்மானத்தை, மீன்வள துறை, மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு, மீனவர்கள் அனுப்பி உள்ளனர்.
கிராமங்களுக்கு ஒதுக்க வேண்டும்
பழவேற்காடு பகுதியில், ஏற்கனவே கட்டப்பட்ட, 25 கடைகள் மீனவ கூட்டுறவு சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மீனவர்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதுபோன்று தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளையும், முதற்கட்டமாக, பூர்வீகமாக தொழில் செய்யும் மீனவ கிராமங்களுக்கு ஒதுக்க வேண்டும்.மேலும், அதே பகுதியில், கூடுதல் கடைகளை கட்டி, மீதம் உள்ள கிராமங்களுக்கு வழங்க வேண்டும். இது, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்டட பராமரிப்பு செலவினங்களுக்கு, குறிப்பிட்ட தொகையை வழங்கவும் தயாராக உள்ளோம்.
சி.ரமேஷ்சாட்டன்குப்பம், பழவேற்காடுஏல முறை வேண்டாம்ஏலம் விடும் போது, வசதி படைத்தவர்கள், அதிக தொகைக்கு கடைகளை ஏலம் எடுப்பர். ஒரே நபர் வெவ்வேறு பெயரில் அதிக கடைகளை எடுக்கும் நிலை உருவாகும். இதனால், கிராமங்களுக்கு இடையே தேவையற்ற கவுரவ பிரச்னைகள் ஏற்படும். மீனவர்களின் ஒற்றுமை பாதிக்கும். அதனால் ஏலம் முறையை தவிர்க்க வேண்டும். இத்திட்டம் மீனவர்களுக்கானது என்பதால், அதை மீனவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
வே.சுப்ரமணி, பசியாவரம், பழவேற்காடுமாவட்ட குழு முடிவு செய்யும்கட்டுமான பணிகள் இம்மாதத்திற்குள் முடிவடையும் நிலையில் உள்ளது. கடைகளை, அரசு விதிகளின்படி ஏலம் விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. இருப்பினும், மீனவர்கள் கோரிக்கை, மாவட்ட குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, குழு எடுக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மீன்வள துறை அதிகாரி, பொன்னேரி.

மூலக்கதை