கோவையிலும் அத்துமீறி நடக்கும் மலையேற்றம்

தினமலர்  தினமலர்
கோவையிலும் அத்துமீறி நடக்கும் மலையேற்றம்

தேனியைப் போன்று, கோவையிலும் அனுமதியின்றி, மலையேற்றம் செல்வது தொடர்கிறது; தடுக்க முடியாமல், வனத்துறை திணறி வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கிய அங்கமாகவுள்ளது, கோவை வனக்கோட்டம். மொத்தம், 670 சதுர கி.மீ., பரப்புள்ள இக்கோட்டத்தில், ஏழு வனச்சரகங்கள் உள்ளன. அழகிய மலைச்சிகரங்கள், புல்வெளிகள், சோலைக்காடுகள், நீரோடைகள், யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள், அரிய வகை தாவரங்கள் என இயற்கை அளித்த பொக்கிஷமாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

பல விதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வனத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் வனத்துறை உள்ளது. ஆனால், ஆள் பற்றாக்குறை, வசதிகள் குறைபாடு, அதிகாரமின்மை என, பல காரணங்களால், வனத்துக்குள் நடக்கும் பல்வேறு அத்துமீறல்களைத் தடுக்க முடியாத நிலையில் இத்துறை உள்ளது.

மருதமலை, வெள்ளியங்கிரி, தடாகம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், வனத்துறை அனுமதியின்றி, மலையேற்றம் செய்வதும், காட்டுப்பயணம் மேற்கொள்வதும் சர்வசாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில், ஆபத்தான வழிகளில் மலைப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது தொடர்கதையாகவுள்ளது.

இவ்வாறு அத்துமீறுவோரை, கீழ் நிலையிலுள்ள வனத்துறையினரால் தடுக்க முடிவதில்லை.ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமென்று கூறி, மலையுச்சிக்கு அழைத்துச் செல்வதற்கு, உள்நாட்டவர்களிடம் இரண்டாயிரம் ரூபாய், வெளி நாட்டவர்களிடம் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவர்களால், காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகம்; குரங்கணி போன்று, பெரும் உயிரிழப்பு ஏற்படுவதற்கான சூழலும் இங்குள்ளது; மட்டுமின்றி, காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்களால் இவர்கள் தாக்கப்படும் அபாயமும் அதிகமுள்ளது. அதனால், பக்தர்கள், சூழல் ஆர்வலர்கள் யாருமே, வனத்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி, காட்டுக்குள் செல்ல வேண்டாமென்று வனத்துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதே எச்சரிக்கையை பல முறை அவர்கள் விடுத்தும், பலரும் மதிப்பதில்லை என்ற நிலை உள்ளது. தடுக்கும் வனத்துறையினரை, அரசியல்வாதிகள் அல்லது உயரதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவதும் தொடர்கிறது. குரங்கணி சம்பவத்துக்கு பின்பாவது, இவர்கள் திருந்த வேண்டியது அவசியம்.

கைது செய்யப்படுவர்!

கோவை டி.எப்.ஓ., சதீஷ் கூறுகையில், ''தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோவை குற்றாலம், பரளிக்காடு ஆகிய இடங்களுக்கு மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லவும் அனுமதி பெற வேண்டும். வனத்துறை அனுமதியின்றி வனத்துக்குள் நுழைவோரைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நுழைந்தால், அவர்கள் மீது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.



-நமது நிருபர்-

மூலக்கதை