குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், 11-ந் தேதியன்று கொழுக்குமலை கிராமத்தில் இருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.

இந்த கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர், வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

தீயணைப்புத் துறை, வனத்துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் 26 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காட்டுத்தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, ஹேமலதா, புனிதா, சுபா, அருண், விவின், நிஷா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா, விவேக் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய பத்து நபர்கள் துரதிருஷ்டவசமாக உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை