காட்டுத்தீயில் இருந்து உயிர் பிழைத்த பெண்கள் பரபரப்பு தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
காட்டுத்தீயில் இருந்து உயிர் பிழைத்த பெண்கள் பரபரப்பு தகவல்

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப்பகுதி மலையேற்ற பயிற்சிக்காக சென்றவர்களில் சென்னை குரோம்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்த கல்லூரி மாணவி சஹானாவும் ஒருவர். அவர் குரங்கணி காட்டுத் தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ.(பொருளாதாரம்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். டிரையத்லான் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஹானா ஏற்கனவே மலையேற்ற பயிற்சிக்காக ஆந்திர மாநிலம் நாகாலாபுரம் மலைப்பகுதிக்கு சென்று வந்தவர் ஆவார்.

உயிர் தப்பிய மாணவி சஹானா கார் மூலம் தேனியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் பதற்றம் நீங்காத நிலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரவில் முகாமிட்டோம்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து 23 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு பஸ்களில் தேனி சென்றோம். அங்கிருந்து அனைவரும் ஒரே குழுவாக மலையேற புறப்பட்டோம். அது செங்குத்தான மலைப்பகுதி. எங்களுக்கு உதவியாக 4 வழிகாட்டிகளும் வந்தனர்.

தேனியில் இருந்து குரங்கணி காட்டு மலைப்பகுதி வழியாக அங்குள்ள கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றோம். மலையேறியபோது எங்களுடன் வந்த 3 பேரால் நடக்க முடியவில்லை என்று மூணாறுக்கு ஜீப்பில் சென்று விட்டனர். குரங்கணியில் இருந்து நாங்கள் சென்ற இடம் மொத்தம் 18 கிலோ மீட்டர்கள்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு மலையேறத் தொடங்கினோம். செங்குத்தான மலை என்பதால் மெதுவாகத்தான் ஏற முடிந்தது. மாலை 6 மணிக்கு கொழுக்கு மலை சென்றடைந்தோம். இரவில் அங்கேயே 4, 5 பேராக தனித்தனியாக முகாமிட்டு தங்கினோம். எங்களுடன் வேறு சில மாவட்டங்களில் இருந்து 2 மலையேற்றக் குழுக்கள் வந்திருந்தன. அவர்களும் அங்கு முகாமிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலைக் குள் தேனிக்கு திரும்பி அங்கிருந்து சென்னைக்கு திரும்ப வேண்டும் என்பது எங்களது திட்டம். இதனால் அன்று காலை 11 மணிக்கு முகாமிட்ட மலைப்பகுதியில் இருந்து புறப்பட்டோம். கீழே இறங்கும்போது விரைவாக மலையடிவாரத்தை விட்டு இறங்கி விட முடியும் என்பதால் தாமதமாகத்தான் கிளம்பினோம்.

திகில் அனுபவம்

அதன் பிறகு மதிய உணவிற்கு ஒரு இடத்தில் 2 மணி அளவில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அப்போது அந்த பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் சிதறி ஓடினோம். நானும் என்னுடன் மேலும் 5 பேரும் சேர்ந்து மலையடிவார பள்ளத்தில் குதித்தோம். மாலை 6 மணிக்கு மேல் கிராம மக்களும் வனத்துறையினரும் எங்களை மீட்டு அழைத்து வந்தனர்். இதில் எங்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. தீ பரவியபோது உயிர் தப்பிப்பதற்காக மலையின் மேற்பகுதிக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

மலையேற்ற பயிற்சிக்கு செல்லும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எங்களுக்கு வாய்மொழியாக ஓரளவுதான் கூறப்பட்டு இருந்தது. சமயோசிதமாக செயல்பட்டு தப்பிப்பது பற்றிய செய்முறை பயற்சி எதையும் நாங்கள் பெறவில்லை. இதனால்தான் பதற்றத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று கண்களை மூடிக்கொண்டு மலையடிவாரத்தில் இருந்த மிகப்பெரிய பள்ளத்தில் குதித்தோம். இதுபோன்ற திகிலான அனுபவத்தை இப்போதுதான் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறேன். பள்ளத்தில் குதிப்பதற்கு முன்பு வரை உயிர் பிழைப்போமா? என்ற மரண பயம்தான் இருந்தது. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.டி. ஊழியர்

இந்த விபத்தில் உயிர் பிழைத்த இன்னொரு சென்னைப் பெண் விஜயலட்சுமி. தாம்பரம் முடிச்சூர் அருகே வரதராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் இவர், தனியார் கம்ப்யூட்டர் மென் பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

டிரையத்லான் குழுவில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற விஜயலட்சுமி அவருடைய தோழியும் பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினர்.

காட்டுத் தீவிபத்தில் சிக்கி மீண்ட விஜயலட்சுமி காரில் நேற்று சென்னைக்கு வந்தார்.

புகைமண்டலம்

அவர் வேதனையுடன் கூறும்போது “குரங்கணி மலைப்பகுதியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென அந்த பகுதியில் காட்டுத் தீ பரவியது. காற்று வேகமாக வீசியதால் எந்தப்பக்கம் இருந்து தீ பரவுகிறது என்பதை அறிய முடியவில்லை. ஏனென்றால் முதலில் புகைமண்டலம்தான் சூழ்ந்திருப்பதுதான் தென்பட்டது. பிறகே இது தீயின் தாக்கம் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ஆனால் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டால் உயிர் பிழைப்பது கடினம் என்பதை வினாடி நேரத்தில் உணர்ந்தோம்.

இதனால் நானும் எனது தோழி நிவேதாவும் அங்கிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் குதித்தோம். எங்களை பார்த்து ஏராளமானவர்கள் அதே பகுதி பள்ளத்தில் குதித்தனர். இப்படி குதித்த அத்தனைபேரும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினோம். அதன்பிறகு கிராம மக்கள் எங்களை மீட்டு தரைப்பகுதிக்கு அழைத்து வந்தனர். எங்களுடன் வந்தவர்களில் பலர் உயிர் இழந்துவிட்டதாக கேள்விப்பட்டோம். இது மிகுந்த வேதனை தருகிறது. இதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது” என்றார்.

மூலக்கதை