மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. அதன் காரணமாக மழை பெய்யாதா? என்று மக்கள் நினைக்கிறார்கள்.

இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கும் இந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்திய கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்மாவட்டங்களில் மழை

இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே வலுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அது அடுத்த 36 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மாலத்தீவு அருகே தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

இதன் காரணமாக இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

மீனவர்கள்

மேலும் குமரிக்கடல், கேரளாவின் தெற்கு பகுதி, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும். இதன் காரணமாக லட்சத்தீவு, கேரளாவின் தெற்கு பகுதி, மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும் 36 மணிநேரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மூலக்கதை