காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்/;கவலையில் விவசாயிகள்

தினமலர்  தினமலர்

தேவதானப்பட்டி;தர்மலிங்கபுரத்தில் விளைநிலங்களில் பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தர்மலிங்கபுரம், காமாட்சிபுரம், தேவதானப்பட்டி, எண்டப்புளி கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாகும். தக்காளி, வாழை, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் நீருக்காக காட்டு விலங்குகள் மலையடிவாரத்தில் உள்ள தோட்டப்பகுதிகளில் புகுந்து வருகிறது. கூட்டமாக வரும் பன்றிகள் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. வாழை மற்றும் தக்காளி செடிகளை தோண்டிப் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் அவை காய்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தேவதானப்பட்டி வனபகுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மலிங்கபுரம் தக்காளி சாகுபடி விவசாயி முருகன் கூறுகையில், ''வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மிகவும் சிரமப்பட்டு தக்காளி சாகுபடிசெய்து பலனுக்கு வந்துள்ளது.கட்டுபடியான விலை கிடைக்காத நிலையில் காட்டுப்பன்றிகள் செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை