மாநகராட்சி பணிகளில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்:இழுத்தடிக்கப்படும் பணிகளால் நிதியிழப்பு

தினமலர்  தினமலர்
மாநகராட்சி பணிகளில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்:இழுத்தடிக்கப்படும் பணிகளால் நிதியிழப்பு

மதுரை:மதுரை நகரில் வளர்ச்சிப் பணிகளை ஒரே ஒப்பந்ததாரருக்கு தாரைவார்த்து கொடுப்பதால், பல பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.ரோடு அமைத்தல், கான்கிரீட் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகளின் ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகளை தாரைவார்த்து கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் கலைநகர் 1வது தெருவில் ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு குறைந்த தொகை தாக்கல் செய்த ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர் பணியை துவக்கும் முன்னதாக அங்கு வேறு ஒரு ஒப்பந்ததாரர் பணியை துவக்கியிருந்தார். அதிர்ச்சியடைந்த ஒப்பபந்ததாரர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். விசாரித்த போது இதுபோல் வேறு சில முறைகேடுகள் அம்பலமானது. சில அதிகாரிகளின் துணையுடன் நடக்கும் இந்த விதிமீறல்களால் மாநகராட்சியின் நிதி கூடுதலாக வீணடிக்கப்படுகிறது.
மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தில் சூர்யா நகர் பூங்கா ரூ.43 லட்சம், அண்ணாநகர் செண்பகத் தோட்டம் பூங்கா ரூ.52.25 லட்சம், மாநகராட்சி வளாக பூங்கா ரூ.93 லட்சத்திற்கான பணிகளை ஒரு ஒப்பந்ததாரர் எடுத்துள்ளார். அவர் பல மாதங்களாக பணிகளை இழுத்தடிப்பதால் வேறு வழியின்றி அவருக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பணிகளை அடுத்து எப்படி தொடர்வது என மாநகராட்சி திணறுகிறது. தகுதியற்ற ஒப்பந்ததாரர்களின் தயவை எதிர்பார்க்கும் சில அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான், நிதி இழப்புகளை வருங்காலங்களிலும் தவிர்க்க முடியும்.

மூலக்கதை