சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டடம்! நீண்ட இழுபறிக்கு பின் இறுதியானது இடம்:விரைவில் பணி துவங்க அதிகாரிகள் திட்டம்

தினமலர்  தினமலர்
சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டடம்! நீண்ட இழுபறிக்கு பின் இறுதியானது இடம்:விரைவில் பணி துவங்க அதிகாரிகள் திட்டம்

சோழிங்கநல்லுார், தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம், நீண்ட இழுபறிக்கு பின், தற்போது, இறுதி செய்யப்பட்டு உள்ளது. இடத்திற்கான தீர்மான கடிதத்தை, மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி உள்ளதால், விரைவில், கட்டுமான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் தாலுகாவில் இருந்து, 2009ல், குறிப்பிட்ட சில பகுதிகளை பிரித்து, ஆலந்துார், சோழிங்கநல்லுார், புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன.இதில், புதிதாக உருவாக்கப்பட்ட சோழிங்கநல்லுார் தாலுகாவில், மேடவாக்கம், மடிப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி உட்பட, 23 கிராமங்கள் சேர்க்கப்பட்டன.ஆவணங்கள்
வாரிசு, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களும், சிறப்பு தனி வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ், முதியோர், நலிவுற்றோர், விதவையர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளும், இங்கு வழங்கப்படுகின்றன.அதேபோல், தாம்பரத்தில் இருந்து பிரிந்த போது வழங்கப்பட்ட, பழைய ஆவணங்களுடன் சேர்த்து, புதிதாக பெறப்பட்ட ஆவணங்களும், இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.தற்போது, ஆவணங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க வழியின்றி, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துஉள்ளனர்.
வாரந்தோறும், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும், மக்கள் குறைதீர் முகாம்களில் பெறப்படும் மனுக்களும், ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படுவதால், பல நேரங்களில், மனுக்களை தேடுவதிலேயே, அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. முதல்கட்டமாக, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையில், தனியார் கல்லுாரி அருகே, இடம் பார்க்கப்பட்டு, வனத்துறை அனுமதி கிடைக்காததால் கைவிடப்பட்டது.அடுத்ததாக, நெடுஞ்செழியன் தெருவை ஒட்டிய, மாந்தோப்பு பகுதியில், இடம் பார்க்கப்பட்டு, மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் அளிப்பதில், மெத்தனம் காட்டியதால் கைவிடப்பட்டது.மூன்றாவதாக, நாராயணசாமி நகரில், இடம் பார்க்கப்பட்டு, அங்கு இடத்தின் உரிமையாளருடன் பிரச்னை எழுந்ததால், அவர் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; அது நிலுவையில் உள்ளது.பரிசீலனை
இவ்வாறு, ஒவ்வொரு முறையும், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், ஏதாவது குளறுபடியான இடத்தையே தேர்வு செய்ததால், புதிய கட்டடம் கட்டுவதில் சிக்கல் நீடித்தது.இதனால், அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் கோப்புகள் தேங்கி, சான்றிதழ் பெறுவது முதல், அனைத்திற்கும், மாதக்கணக்கில், மக்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது.
தற்போது, நெடுஞ்செழியன் தெருவில் உள்ள மாந்தோப்பில், புதிய கட்டடம் கட்டுவதற்கான, தீர்மான கடிதத்தை, மாநகராட்சி அதிகாரிகள், அடையாறில் உள்ள, தெற்கு வட்டார இணை கமிஷனர் அலுவலகத்திற்கு, பரிசீலனைக்கு அனுப்பி உள்ளனர்.இதனால், நெடுஞ்செழியன் நகரில், புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள், விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தாலுகா அலுவலம், 1,200 சதுரடி பரப்பளவில், மிகவும் குறுகிய இடத்தில் அமைந்து உள்ளதால், கோப்புகளை பாதுகாக்க முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர். அதிகாரிகள் அறிவிப்போடு நின்றுவிடாமல், பணிகளை விரைவில் துவங்க வேண்டும். அப்போது தான், தேங்கி கிடக்கும் புகார்களுக்கு, தீர்வு கிடைக்கும்.

சமூக ஆர்வலர்கள்வட்டார இணை கமிஷனரிடம் இருந்து வர வேண்டிய தீர்மான கடிதத்திற்காக காத்திருக்கிறோம். கடிதம் கிடைத்த மறு நாளே, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, புதிய இடத்தில் கட்டடம், கட்டுவதற்கான பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். ஏற்கனவே, 2012ல், புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு, 2.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டிருப்பதால், நிதி பெறுவதிலும் சிக்கல் இருக்காது.

தாலுகா அதிகாரிகள்மாற்று இடத்திற்கான வரைபடம் மற்றும் நெடுஞ்செழியன் தெருவில் பார்க்கப்பட்ட, மாந்தோப்பு அமைந்துள்ள இடத்திற்கான வரைபடம் ஆகியவை, சமீபத்தில் தான் வழங்கப்பட்டன. அதனால், தீர்மான கடிதத்தை, தெற்கு வட்டார இணை கமிஷனரிடம் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளோம்.

மாநகராட்சி அதிகாரிகள்

மூலக்கதை