பாலம் எப்போது? மக்கள் நிதியிலும் துவங்கவில்லை; அதிகாரிக்கும் அக்கறையில்லை

தினமலர்  தினமலர்
பாலம் எப்போது? மக்கள் நிதியிலும் துவங்கவில்லை; அதிகாரிக்கும் அக்கறையில்லை

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கே, உயர் மட்டபாலம் கட்ட பொதுமக்கள் பங்களிப்புடன் நிதி செலுத்தியும், பணி துவங்காமல் உள்ளது.

திருப்பூர், மங்கலம் ரோடு பகுதியை, காலேஜ் ரோட்டுடன் இணைக்கும் வகையில், பாரப்பாளையம் - ராயபுரம் இடையே, நொய்யல் ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, பொதுமக்கள், தொழில் முனைவோர் இணைந்து, நிதி திரட்டி, பாலம் கட்ட முடிவு செய்தனர். இதற்காக, 'தீபம்' பவுண்டேசன் துவக்கப்பட்டது.

பாரப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, 30 மீட்டர் நீளம்; 12 மீட்டர் அகலத்தில் உயர் மட்ட பாலம் கட்டவும்; பாலத்தையும், பாரப்பாளையத்தையும் இணைக்கும் வகையில், ஒரு கி.மீ., துாரம் இணைப்பு ரோடு மற்றும் ராயபுரம் பகுதியில், 500 மீட்டர் நீளத்துக்கு இணைப்பு ரோடு என, மூன்று கோடி ரூபாய் மதிப்பில், இதற்கான திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு செய்யப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன், அரசும் இணைந்து, தன்னிறைவு திட்டத்தின் கீழ், பாலம் கட்ட, தீபம் பவுண்டேசன் சார்பில், ஊரக வளர்ச்சி முகமைக்கு, 1.5 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 7 ல், நிதி வழங்கப்பட்டு, ஒரு ஆண்டாகியும் இதுவரை பாலத்திற்கான ஆரம்ப கட்ட பணி கூட துவங்கவில்லை. இதனால், பாலம் கட்ட நிதி வழங்கிய, பொதுமக்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலம் பணியை விரைந்து துவக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் தாமதமாகி வருகிறது. விரைவில் பணி துவங்கும்,' என்றனர்.

'தீபம் பவுண்டேசன் நிர்வாகி, சிவசங்கர் கூறுகையில், ''பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை, முதல்வர் அலுவலகத்தில், அவரது அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. ''விரைவில், அனுமதி கிடைத்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின், பாலம் கட்டுமான பணிகள் துவங்கும் வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

மூலக்கதை