40 பேர் கதி? தேனி குரங்கணியில் சுழன்றடித்த காட்டுத்தீ :சுற்றுலா வந்தவர்களை சுற்றி வளைத்தது

தினமலர்  தினமலர்

போடி:சென்னை, சேலத்தில் இருந்து தேனி மாவட்டத்தின் போடி அருகே உள்ள சுற்றுலாத்தலமான கொழுக்குமலைக்கு சுற்றுலா சென்ற 40 பேர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 2 வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் போடி அருகே வனப்பகுதியில் தீ பரவி வந்தது. சென்னை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சென்னை, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த 27 பேர் குடும்பத்துடன் பிப்.,10ல் தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு சுற்றுலா சென்றனர். வனப்பகுதி வழியாக குரங்கணிக்கு மலையேறும் பயிற்சிக்கு (டிரக்கிங்) சென்றனர். எட்டு பேராக பிரிந்து தனித்தனி குழுக்களாக பயணம் செய்தனர்.இந்நிலையில் நேற்று மாலை, பலர் காட்டுத் தீயில் சிக்கியிருப்பதாக கொடைக்கானல் வனத்துறையில் இருந்து, தேனி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் அதிரடிப்படை, வனத்துறை, தீயணைப்பு துறையினர் சென்றனர்.
அடர்ந்த காட்டிற்குள் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று தேடினர். மாலை 4:00 மணியில் இருந்து 7:15 மணி வரை தேடினர். இதில் திருப்பூரை சேர்ந்த சஜானா, 11, பாவனா, 12, ராஜசேகர், 29, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மேகா, 8, பிரபு, 30,சென்னையை சேர்ந்த சகானா, 20, பூஜாகுப்தா, 27, மோனிகா, 30, ஆகியோர் காயம் இன்றி மீட்கப்பட்டனர். இந்த குழுவில் இருந்த மேகா என்ற குழந்தையின் தாய் சவிதாவை காணவில்லை. மேலும் இரண்டு குழுவில் உள்ளவர்களை தேடும் பணிநடக்கிறது. மீட்கப்பட்ட 8 பேரும் குரங்கணி ஆரம்ப சுகாதார நிலைத்தில் உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இரவில் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீ அதிகரித்து வருகிறது. அதனால், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்துஉள்ளோம்' என்றனர்.
இந்நிலையில் மற்றொரு குழுவை சேர்ந்த சென்னை முடிச்சூரை சேர்ந்த விஜயலட்சுமி, 27, வடபழனியைச் சேர்ந்த ஐ.ஐ.டி., நிறுவன ஆராய்ச்சியாளர் நிவேதா, 28, ஆகியோர் மீட்கப்பட்டனர். நான்கு பேர் உடல் கருகிய நிலையில் இருப்பதாக தெரிந்துள்ளது.
'தவறான பாதையில் சென்றதே காரணம்'
தீ விபத்துக்கான காரணம் குறித்து, சுற்றுலாத்துறை அதிகாரி கூறியதாவது:மலை பகுதிகளில், இந்த மாதம் இலையுதிர் காலம் என்பதால், அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது இயல்பு. இந்த காலத்தில், மலையேறுதல் ஏற்றதல்ல. கொடைக்கானலில், ஒரு வாரத்தில் மட்டும், மூன்று முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குரங்கணி மலை பகுதியில், மலையேற்றத்திற்கு பாதுகாப்பான வழிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், இந்த சுற்றுலா பயணியர், பாதுகாப்பான வழியான குரங்கணியில் இருந்து, 'டாப் ஸ்டேஷன்' செல்லாமல், அடர்ந்த வனப்பகுதியான கொழுக்குமலையில் இருந்து, மலையேற்ற பயணத்தில் ஈடுபட்டனர். அதனால் தான், தீயில் சிக்கியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


5 பேர் பலி?
குரங்கணி மலைப்பகுதிக்கு தேனி நலம் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் முதலுதவிக்காக சென்றுள்ளனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ''கோவை விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. 10 கமாண்டோ அதிகாரிகள் வந்துள்ளனர். இன்று காலை முதல் தீவிர தேடுதல் பணிகள் நடக்கும். இறப்பு உறுதி செய்யப்படவில்லை,'' என்றார்.கிராமத்தினர் கூறுகை யில், '3 பேர் பலியாகி கிடந்தனர். இருவர் மலைப்பகுதியில் சிக்கிக் கிடந்தனர். அவர்களும் பலியாகி இருக்கலாம்' என்றனர்.

மூலக்கதை