காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்

சேலம்: சேலம் அழகாபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி சித்ரா.

இவர்களது மூத்த மகள் நிவேதா. விநாயகா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

மூன்றாம் வகுப்பில் இருந்து, மாணவி நிவேதா  வலு தூக்கும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தந்தை வெங்கடேஸ்வரனும் வலு தூக்கும் வீரர் என்பதால், சிறு வயது முதலே நிவேதாவுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள நிவேதாவுக்கு, தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா தனது தந்தை வெங்கடேஸ்வரனுடன் தென் ஆப்ரிக்கா சென்றார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற 43 கிலோ எடை பிரிவு போட்டியில் நிவேதா கலந்து கொண்டார். இதில், நிவேதா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.



இதனால் அவரது தாய் சித்ரா மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மகளின் சாதனையை கொண்டாடும் வகையில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தாய் சித்ரா இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘வலு தூக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிவேதா, மூன்றாம் வகுப்பில் இருந்தே கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் பல பரிசுகளை பெற்றுள்ளார்.

தற்போது காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் எனது மகள், தங்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் நிவேதா பெருமை சேர்த்துள்ளார்.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,’’ என்றார்.

20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட போட்டியில், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நிவேதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

.

மூலக்கதை