டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி

லாகூர்: பாகிஸ்தான்-உலக லெவன் இடையேயான, 2வது டி20 போட்டி, லாகூர் கடாபி மைதானத்தில், நேற்று இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

பாபர் அசாம் 45, அகமது செஷாத் 43 ரன்கள் எடுத்தனர். திசாரா பெரேரா, சாமுவேல் பத்ரி தலா 2, பென் கட்டிங், இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த உலக லெவன், 19. 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹசீம் அம்லா 72, திசாரா பெரேரா 47 ரன்கள் எடுத்தனர்.

இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இமாத் வாசிம், சோகைல் கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

உலக லெவன் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ருமான் ரேஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் கிடைத்தன.

இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. எனினும் இந்திய வீரர் டோனியின் ஸ்டைலில், 5வது பந்தில் திசாரா பெரேரா சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

திசாரா பெரேராவுக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், ‘’உலக லெவன் அணிக்கு தேர்வானது எனக்கு கிடைத்த கவுரவம்.

இது எனது கனவு. கடைசி வரை நிலைத்து நின்று விளையாடும்படி ஹசீம் அம்லா என்னிடம் கூறினார்.

வழக்கமாக இதே போன்ற சூழ்நிலைகளில் எனது நாட்டு அணிக்காக (இலங்கை) விளையாடுவேன்.

போட்டியை நிறைவு செய்வது தற்போது எனக்கு பழக்கமாகி விட்டது.

எங்களை நன்கு உற்சாகப்படுத்தும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி’’ என்றார். முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், தொடரை 1-1 என உலக லெவன் சமன் செய்துள்ளது.

மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, லாகூர் கடாபி மைதானத்தில், இந்திய நேரப்படி நாளை இரவு 7. 30 மணிக்கு நடைபெறுகிறது.

 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது லாகூரில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்னணி அணிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.   உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும், பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், ஐசிசி ஒத்துழைப்புடன் உலக லெவன் அணி உருவாக்கப்பட்டு, சுதந்திர கோப்பை என்ற பெயரில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட்டு வருகிறது.



.

மூலக்கதை