ஆதார் சட்டம் தகவல் பாதுகாப்புக்கு இரும்புச் சுவராக இருக்கும்: அருண் ஜேட்லி நம்பிக்கை

தி இந்து  தி இந்து
ஆதார் சட்டம் தகவல் பாதுகாப்புக்கு இரும்புச் சுவராக இருக்கும்: அருண் ஜேட்லி நம்பிக்கை

ஆதார் சட்டம் தகவல் பாதுகாப்புக்கு இரும்புச் சுவர் போல் உறுதியாக இருக்கும் என்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐநா புதுடெல்லியில் நடத்திய நிதி உட்சேர்ப்பு குறித்த கூட்டத்தில் அருண் ஜேட்லி ஆதார் குறித்து கூறிய போது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் திட்டமான ஆதார் திட்டத்துக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. தற்போது ஆதார் சட்டம் அரசியல் சாசனத் தன்மைக்கான சோதனையைக் கடந்து விடும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தனிமனிதத் தகவல் பாதுகாப்புரிமை அரசியல் சாசனச் சட்டப்படி அடிப்படை உரிமையே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த சூழ்நிலையில் அருண் ஜேட்லி இத்தகைய நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

“சட்டம் அவசியமாகிறது, தரவுப்பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள விவாதங்கள் காரணமாக தரவுகளைப் பாதுகாக்க ஒரு இரும்புச் சுவரை எழுப்ப வேண்டியுள்ளது. இது குறித்த சட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் உச்ச நீதிமன்றம் அறிவுக்குகந்த கட்டுப்பாடுகள் குறித்து கூறியதையும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டினார். “சட்ட ரீதியாக அவை அறிவுக்குகந்தவையாகத்தான் இருக்க முடியும், தேசப்பாதுகாப்பு நலன், குற்றத்தைக் கண்டுபிடித்தல் அல்லது சமூகப் பயன்களை விநியோகித்தல் ஆகிய நலன்கள் இதில் அடங்கும்.

மூன்றாவதாகக் கூறிய சமூகப் பயன்கள் என்பதே இதில் பிரதானம். இது தன்னுணர்வுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில்தான் பில்லியன் ஆதார் அட்டைகள், பில்லியன் வங்கிக் கணக்குகள், செல்பேசி எண்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடையாள வலைப்பின்னலை ஒருமுறை உருவாக்கி விட்டோம் என்றால் அரசின் சமுதாயத் திட்டங்கள் உரியோருக்குப் போய்ச் சேர ஏதுவாக இருக்கும்.

ஜன் தன் யோஜனாவின் கீழ் 30 கோடி மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர், முன்னதாக 42% மக்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. இந்த 3 ஆண்டுகளில் நிலுவைத் தொகை பூஜ்ஜியம் உள்ள வங்கிக் கணக்குகள் 77%-லிருந்து 20% ஆகக் குறைந்துள்ளது. இந்த 20%-ம் கூட நேரடி பயன் திட்டங்கள் விரிவடையும் போது பூஜ்ஜிய நிலுவை வங்கிக் கணக்குளாக இருக்காது.

மேலும் நிதி உட்சேர்ப்புக் கொள்கையில் ஏழை மக்களுக்கு காப்பீடு மூலம் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார் அருண் ஜேட்லி.

மூலக்கதை