மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு தொடர்பில்லை – நாரயணசாமி விளக்கம்

விகடன்  விகடன்
மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு தொடர்பில்லை – நாரயணசாமி விளக்கம்

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 778 மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு ஆட்சியாளர்களையும், தனியார் கல்லூரி நிர்வாகங்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

கடந்த 2016-17 கல்வியாண்டில் ’நீட்’ மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்யாமல், தன்னிச்சையாக 770 எம்.பி.பி.எஸ் இடங்களை புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடமளித்தனர். மேலும் மாணவர் சேர்க்கைக்காக மருத்துவக் கவுன்சில் கொடுத்திருந்த காலக்கெடு முடிந்த நிலையில் 8 மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து பெற்றோர் மாணவர் சங்கம் அளித்த புகாரின் பேரில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 778 மாணவர்களின் சேர்க்கையையும் ரத்துசெய்து இந்திய மருத்துவக் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்ட 283 எம்.பி.பி.எஸ் இடங்களும் ’சென்டாக்’ கலந்தாய்வு மூலம் எந்த பிரச்னையுமின்றி நிரப்பப்பட்டுவிட்டது. நிர்வாக ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை மத்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உள்ளது. அதில் தலையிடும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இதற்கு தனியார் கல்லூரி நிர்வாகங்கள்தான் பதில் அளிக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் அதற்கு நிர்வாகங்கள்தான் பொறுப்பே தவிர மாநில அரசு அதற்கு பொறுப்பேற்காது. இந்த முறைகேடுகள் தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகங்களை அழைத்துப் பேச இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மூலக்கதை