ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

தி இந்து  தி இந்து
ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து 2011 ஏப்ரலில் சிவசங்கரன் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

மேக்சிஸ் நிறுவனம் சார்பில் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிறுவனங்களுக்கு மொரிஷியஸ் வாயிலாக ரூ.742.58 கோடி கைமாறியிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன. இது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் 2014-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், “மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மொரிஷியஸைச் சேர்ந்த குளோபல் கம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியது.

ரூ.600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு மூதலீட்டுக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அப்போதைய நிதி அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்ஐபிபி) மூலம் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மற்றும் வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான சோதனையின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா மூலம் வெளிநாட்டு முதலீடு வந்தது தொடர்பான ஆவணம் சிக்கியது.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் முதலீடு செய்வதற்கான எப்ஐபிபி ஒப்புதல் பெறுவதற்காக, அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனத்துக்கு ஆலோசனை கட்டணமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை