சகலமும் இலவசம் என்றாலும் நவோதயா பள்ளியை ஏன் எதிர்க்கிறார்கள்?

விகடன்  விகடன்
சகலமும் இலவசம் என்றாலும் நவோதயா பள்ளியை ஏன் எதிர்க்கிறார்கள்?

`தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க, தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. 

இந்நிலையில் நவோதயா பள்ளிகளால் நமக்கு என்ன பயன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதுகுறித்து கல்வித் துறை சார்ந்தவர்களிடம் பேசினோம். 

`வளரும் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் `பாடம்' நாராயணன்...


``கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் `நவோதயா பள்ளி'. `ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி' என்ற அளவில், ஆங்கிலம், இந்தி, மாநில மொழி என மூன்று மொழிக்கொள்கையிலும் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளியைத் தொடங்க, 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை மாநில அரசு இடம் ஒதுக்கவேண்டும். அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் கல்விக்கொள்கையானது, `திறமைசாலி மாணவர்கள் மட்டும் தனியாக வகுப்பிலோ அல்லது பள்ளியிலோ படிப்பதைவிட, மற்ற சராசரி மாணவர்களுடன் இணைந்து படிக்கும்போதுதான் கற்றல்திறன் மேம்படும்' என்கிறது. ஆனால், நவோதயா பள்ளியில் 80 குழந்தைகளுக்கு அனைத்து வசதிகள் கிடைக்கும் வகையில் தேர்ந்தெடுத்துப் படிக்கவைப்பதும், இதர பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு எந்த வசதியும் இல்லாமலிருப்பதும் எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. ஒரே பள்ளியில் திறமையான மாணவர்கள் 80 பேர் படிப்பதும், 80 பள்ளிகளில் திறமையான மாணவர்கள் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒருபுறம் ஐந்து அல்லது ஆறு கிரவுண்டு அளவு இடத்தில் பள்ளிகள் தொடங்க அனுமதிப்பதும், மற்றொரு புறம் 30 ஏக்கர் நிலத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கவும் செய்கிறார்கள்.

பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படும் நவோதயா பள்ளிக்குப் பதிலாக ,இதர அரசுப் பள்ளிகளுக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து பள்ளிகளை மேம்படுத்தலாம். இன்னும் பல பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறை, விளையாட்டுத்திடல்  போன்ற எந்த வசதியும் இல்லை. ஒரு புறம் நட்சத்திர ஹோட்டலைப் போன்று பள்ளியைத் திறக்கும் மத்திய அரசு, மற்றொரு புறம் இதர பள்ளிகளை தரம் தாழ்ந்த முறையில் நடத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசு தெளிப்படுத்திட வேண்டும். இந்தியாவில் நவோதயா பள்ளி தொடங்கி 30 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இந்தப் பள்ளியில் படித்தவர்கள் பெரிய சாதனையாளர்களாக வந்திருக்கிறார்களா என்றால், இல்லை. `இப்போது நீட் தேர்விலும் இதர தேர்விலும் அதிக அளவில் தேர்ச்சிபெறுகிறார்கள்' என விளம்பரம் செய்கிறார்கள். அப்போது `நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களாக இந்தப் பள்ளிகள் செயல்படுகின்றனவா?' என்று கேள்வியும் எழுகிறது" என்கிறார் `பாடம்' நாராயணன்.
 
கல்வியாளரும் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வருமான ஆயிஷா நடராசன் ...

``மாணவர்களுக்கு சகல வசதியுடன்கூடிய உண்டு உறைவிடப் பள்ளியாக நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதெல்லாம் நல்ல விஷயமே. ஆரம்பத்தில் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டபோது வரவேற்றோம். ஆனால், இந்தப் பள்ளியில் நுழையும் குழந்தை, தாய்மொழியை மறந்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் செயல்படுகிறது என்பதுதான் இந்தப் பள்ளியின் மீது வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில், இருமொழி கொள்கையின் அடிப்படையில்தான் செயல்பட்டுவருகிறோம். ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் படிக்கும்போதுதான் அதன் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு படிக்க முடியும். இந்தி மொழியில் படிக்கச் சொல்வது இன்னும் கடினமானதாகவே இருக்கும்.

பெரிய அளவில் நிதி ஒதுக்கிப் படிக்கவைத்தாலும், இதுவரை இந்தப் பள்ளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாணவர்களின் செயல்பாடு இல்லை. எந்த மாநிலத்தில் அரசு வழங்கும் கல்வி தரம் இல்லாமல் இருக்கிறதோ, அங்குதான் இந்தப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பெயரைப் பெற்றிருக்கின்றன. பீகாரில் பொதுத்தேர்வு எழுதும்போது, மாடிக் கட்டடங்கள் ஏறி `பிட்' கொடுத்து எழுதவைக்கிறார்கள். இங்கு ஆரம்பப் பள்ளியிலேயே இடைநிற்றல் என்பது அதிகமாக இருக்கிறது. இங்கு நவோதயா பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், தமிழ்நாட்டு இடைநிற்றல் என்பது மிகவும் குறைவு. தமிழகத்தில் பள்ளிகளை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டேவருகின்றன. `இந்த மாதிரியான சூழலில் தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையைப் புகுத்துவதற்காக நவோதயா பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்களா?' என்ற சந்தேகமும் இருக்கிறது. எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் கிராமப்புற மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நவோதயா பள்ளிகள் ஆரம்பித்தால் வரவேற்கலாம்" என்றார் ஆயிஷா நடராசன். 

புதுச்சேரியில் நவோதயா பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளி எப்படிச் செயல்படுகிறது என்பதுகுறித்து விசாரித்தோம்.

``தமிழ் மொழியில்தான் பாடங்களை நடத்துகிறோம். இந்தி மொழியை விருப்பப் பாடங்களில் ஒன்றாக வைத்திருக்கிறோம். இந்தி, கட்டாயப் பாடம் கிடையாது. ஆறாம் வகுப்பில் சேர வழங்கப்படும் விண்ணப்பமும் நுழைவுத்தேர்வுகளும் தமிழிலும் ஆங்கிலத்தில்தான் நடத்துகிறோம். ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்தவிதமான செலவும் இல்லாமல் படிக்கலாம். 75 சதவிகித மாணவர்கள் கிராமப் பகுதியிலிருந்தும், 25 சதவிகித மாணவர்கள் ஊரகப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒதுக்கீட்டு அடிப்படையிலேயே இடம் வழங்கப்படுகிறது. பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, புத்தகங்கள் உள்பட அனைத்தும் இலவசம். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாணவர்கள் கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். யாருக்காவது சந்தேகம் இருந்தால், எங்கள் பள்ளிக்கு நேரிடையாக வந்து பார்வையிடலாம். வேறு ஏதேனும் தகவல் வேண்டுமானால், 0413-2655133 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்" என்கிறார் புதுச்சேரி நவோதயா பள்ளி ஆசிரியர்.

தமிழகத்துக்குத் தேவை தரமான கல்வி. அந்தக் கல்வி, நவோதயா பள்ளியிலிருந்து கிடைத்தால் மகிழ்ச்சி!

மூலக்கதை