நாங்கள் விசாரணை நடத்தவே சென்றோம்: குடகு விடுதிக்கு சென்ற டிஎஸ்பி மறுப்பு

தி இந்து  தி இந்து
நாங்கள் விசாரணை நடத்தவே சென்றோம்: குடகு விடுதிக்கு சென்ற டிஎஸ்பி மறுப்பு

தினகரன் தரப்பு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் புகார் உண்மையல்ல பழனியப்பன் குறித்து விசாரிக்கவே சென்றோம் என டிஎஸ்பி வேல்முருகன் மறுத்துள்ளார்.

குடகு விடுதியில் தங்களை மிரட்டி அணி தாவ சொல்கிறார்கள் என்று கோவை டிஎஸ்பி வேல்முருகன் உள்ளிட்ட போலீஸார் மீது தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் குடகுமலையில் உள்ள சுன்டிகோப்பா காவல்நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தமிழக காவல்துறை எங்களை அச்சுறுத்துகிறது, பணம் தருவதாக கூறி, அணி மாறச்சொல்லி மிரட்டுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தங்கத்தமிழ்செல்வன் குறிப்பிட்ட காவல் அதிகாரி, குடகுமலை விடுதிக்கு சென்று விசாரணை நடத்திய கோவை பேரூர் டிஎஸ்பி வேல்முருகனிடம் தி இந்து தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

தங்கத்தமிழ் செல்வனிடம் அவர் அளித்த புகார் கொடுத்தது பற்றி கேட்டபோது 4 டிஎஸ்பிக்களுடன் நீங்கள் சென்று மிரட்டியதாக கூறினார், நீங்கள் அங்கு சென்றீர்களா?

ஆமாம் சென்றேன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீஸாருடன் நேற்று போனோம். நேற்று அவர் இல்லை. வந்துவிட்டோம். அங்குள்ள சிசிடிவி பதிவுகள் கேட்டிருந்தோம். இன்று ஒரு தகவல் பழனியப்பன் வருவதாக தகவல் வந்தது.

இன்று போனோம் அவர்கள் அனைவரும் நன்றாகத்தான் பேசினார்கள். திடீரென்று இன்று மாற்றி பேட்டி அளித்துள்ளனர். எங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. போனது விசாரணைக்கு மட்டுமே. அவர்கள் அதை அரசியலாக்குகிறார்கள்.

காவல்துறை தரப்பில் ரூ.20 கோடி தருவதாகவும் அணி மாறச்சொல்லி வற்புறுத்தியதாக கூறியுள்ளாரே?

அப்படி எல்லாம் இல்லை, லாஜிக் இல்லாத விஷயம். காவல்துறையில் கீழ்மட்ட அதிகாரிகளாக நாங்கள் செல்கிறோம். எங்களால் இப்படி பேச முடியுமா? அப்படி அவசியமும் இல்லை.

சிபிசிஐடி வழக்குக்காக சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி செல்லலாமா?

சிபிசிஐடிக்கு உதவி செய்ய சென்றோம். அவர்களுக்கு மேன் பவர் குறைவு என்பதால் உதவிக்காக செல்வோம். சென்னை, நாமக்கல்லிலிருந்து சிபிசிஐடி வந்தார்கள் உதவி என்ற முறையில் சென்றோம் அவ்வளவே.

இன்று சென்றதற்கு காரணம் பழனியப்பன் அங்குதான் இருப்பதாக சொல்கிறார்கள். அது பெரிய ரிசார்ட் என்பதால் குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிசிடிவி பதிவை கேட்டோம். அங்கு போனாலும் நான் எதுவும் பேசவில்லை சிபிசிஐடி டிஎஸ்பி தான் சிசிடிவி பதிவு கேட்டு கடிதம் கொடுத்து பேசினார் அவ்வளவே.

இவ்வாறு டிஎஸ்பி வேல்முருகன் தெரிவித்தார்.

மூலக்கதை