ரூ.20 கோடி தருவதாக காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ பேட்டி

தி இந்து  தி இந்து
ரூ.20 கோடி தருவதாக காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ பேட்டி

குடகு பகுதியில் விடுதியில் தங்கியிருக்கும் தங்களை போலீஸ் அதிகாரிகளை வைத்து ரூ.20 கோடி வரை தருகிறோம் அணி தாவுங்கள் என்று மிரட்டுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன் பேட்டி அளித்தார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் குடகுமலையில் உள்ள சுன்டிகோப்பா காவல்நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தமிழக காவல்துறை எங்களை அச்சுறுத்துகிறது, பணம் தருவதாக கூறி அணி மாறச்சொல்லி மிரட்டுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

இது குறித்து குடகு பகுதியில் விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வனிடம் தி இந்து தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

இன்று காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தீர்களே அதன் சாராம்சம் என்ன?

ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் மிரட்டுகிறார்கள், தனித்தனியாக மிரட்டுகிறார்கள். உங்கள் பதவியை பறித்துவிடுவோம், எங்களுடன் வந்துவிடுங்கள், ரூ.20 கோடி வாங்கிக்கொள்ளுங்கள் என்று மிரட்டினார்கள். தனித்தனியாக எம்.எல்.ஏக்கள் அறைக்குச் சென்று மிரட்டினார்கள்.

போனது யார் என்று சொல்ல முடியுமா?

போலீஸார் தான் , 4 டிஎஸ்பிக்கள், சில போலீஸார். தமிழ்நாடு போலீஸ், எல்லோரும் கோவையிலிருந்து வந்துள்ளனர்.

அவர்கள் பெயர் விபரம் எதாவது சொல்ல முடியுமா?

கோவை டிஎஸ்பி வேல்முருகன் சட்டம் ஒழுங்கு, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் இன்னும் 4 டிஎஸ்பிக்கள் பெயர் தெரியவில்லை.

அவர்கள் என்ன சொன்னார்கள் என்று விபரமாக சொல்ல முடியுமா?

எடப்பாடி அனுப்பியுள்ளார், நீங்கள் வந்து விடுங்கள் எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணுங்கள் ரூ.20 கோடி வரை கொடுக்க சொல்கிறோம், போன் போட்டுத்தருகிறோம் பேசுங்கள் என்றார்கள். ஆனால் யாரும் அதை விரும்பவில்லை. நேற்றும் வந்தார்கள், இன்றும் வந்தார்கள். அதனால் தான் அவர்கள் மீது இங்குள்ள டிஎஸ்பியிடம் புகார் அளித்தோம்.

புகாரில் விடுதிக்கு வந்த போலீஸார் போட்டோக்களை இணைத்து கொடுத்துள்ளீர்களா?

ஆமாம் புகார் காப்பியுடன் அவர்கள் அனைவரது போட்டோக்களையும் இணைத்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை