மத்திய மாநில அரசுகளின் கவனத்தை திசை திருப்புகிற அறிவிப்பு வெளியாகும் - எதிர்க்கட்சிகள் முழக்கம்

விகடன்  விகடன்
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை திசை திருப்புகிற அறிவிப்பு வெளியாகும்  எதிர்க்கட்சிகள் முழக்கம்

நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் தமிழக மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக 13-ம் தேதி தமிழக மாவட்ட தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருச்சியில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்படி, திருச்சி சிந்தாமணி அண்ணாசாலையில் இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.என் நேரு மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தை கட்சி, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் பேசும்போது : நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் செயல். நீட் தேர்வுக்கு விலக்கு வரும், வரும் என்று தமிழக ஆட்சியாளர்கள் மாணவர்களை கடைசி நிமிடம் வரை நம்பிக்கையூட்டி குழப்பிவிட்டனர்.

கடைசியில் நீட் அமலுக்கு வர, பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களின் குரலாக உச்ச நீதிமன்றத்தில் ஓங்கி ஒலித்த அனிதா தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை மூலம் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் மட்டுமே. எதிர்க்கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் மிகப்பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வரும். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சி பொதுக்கூட்டத்தில் கூறியது போன்று மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை திசை திருப்புகிற அறிவிப்பு வெளியாகும் என்றனர்.

மூலக்கதை