உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு

லாகூர்: 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், முன்னணி அணிகள்  பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றன. கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் பாகிஸ்தான் மீதான எண்ணத்தை மாற்றும் வகையிலும்,  நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், உலக லெவன் அணியுடன் 3 டி20 போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி உலக லெவன்-பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி, லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. முதலில் பேட்  செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

பாபர் அசாம் 86, அகமது செஷாத் 39, சோயப் மாலிக் 38 ரன்கள்  எடுத்தனர். திசாரா பெராரா 2, மோர்னே மோர்கல், பென் கட்டிங், இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.   பின்னர் பேட் செய்த உலக லெவன்,  20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், டேரன்  சம்மி தலா 29, ஹசீம் அம்லா 26 ரன்கள் எடுத்தனர். சதாப் கான், ருமான் ரேஸ், சோகைல்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

2வது போட்டி இன்று  இரவு 7. 30 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

 பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘’இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டி.

பாபர் அசாம், அகமது செஷாத் சிறப்பாக  விளையாடி, வெற்றிக்கு வழிவகுத்தனர். கடைசி கட்டத்தில் சோயப் மாலிக்கும் நன்றாக செயல்பட்டார்.

பாகிஸ்தான் உள்நாட்டு வட்டத்தில், திறமை  வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டே இருந்தால், வருங்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்  என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.



போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ரசிகர்கள்  மற்றும் பிசிபி-க்கு (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன்’’ என்றார். உலக லெவன் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் கூறுகையில், ‘’பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது.

பந்து வீச்சு தாக்குதலில் பல்வேறு வேறுபாடுகளை  பாகிஸ்தான் காட்டியது. ஆனால் நாங்கள் ஒரே மாதிரியாக பந்து வீசியதாக கருதுகிறேன்.

பாகிஸ்தான் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது நன்றாக உள்ளது. அடுத்த 2 ேபாட்டிகளுக்கும் மைதானம் நிரம்பும் என நம்புகிறேன்’’ என்றார்.

பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதில் கவனம்
ஆட்ட நாயகன் விருது வென்ற பாபர் அசாம் கூறுகையில், ‘’எவ்வித அழுத்தமும் இல்லை.

ஆடுகளம் மெதுவாக இருந்தது. பார்ட்னர்ஷிப்பை  கட்டமைப்பதில் கவனம் செலுத்தினோம்.

எனது பிட்னஸில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஆனால் பிட்னஸில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டியுள்ளது என்பதாக கருதுகிறேன்’’ என்றார்.



.

மூலக்கதை