உ.பி.யில் கேலிகூத்து 1 ரூபாய் கடன் தள்ளுபடி செய்த யோகி அரசு: விவசாயிகள் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பி.யில் கேலிகூத்து 1 ரூபாய் கடன் தள்ளுபடி செய்த யோகி அரசு: விவசாயிகள் அதிர்ச்சி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார். அப்போது அவர் விவசாயிகளின்  ரூ. 36 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

இந்த சூழலில் விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் இருந்து வந்த தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் இஷ்வர் தயாள் என்பவரின்  வங்கி கணக்கில் வெறும் 19 காசுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.   அதே போல் ராமானந்த் என்பவருக்கு ரூ. 1. 79 காசுகள்,  முன்னி லால் போளி என்பவருக்கு வெறும் 2 ரூபாய் என தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த தகவலை எங்களால் நம்பவே முடியவில்லை.

மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. சுமார் 1  லட்சம் வரை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என யோகி அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு  ரூ. 10 முதல் ரூ. 215 வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று நடைபெற்ற விழாவின் போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டது  தொடர்பாக சுமார் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இதில் சுமார் 50 விவசாயிகளுக்கு ரூ. 100க்கு குறைவாகவும், சுமார் 200  பேருக்கு ரூபாய் ஆயிரத்திற்கும் குறைவாக மட்டுமே பயன்பெற்றுள்ளனர் என்றனர்.

மற்றொரு விவசாயி கூறுகையில், எனக்கு வெறும் ரூ. 10. 37 காசுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 1  லட்சம் முதல் 1. 5 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கை எனக்கு கடும் அதிர்ச்சி  அளிப்பதாக உள்ளது என்று கவலை தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து யோகி அரசின் வேளாண் அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாகி கூறுகையில், இதற்கு அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? அவர்களது  வங்கி கணக்கில் என்ன கடன் தொகை இருந்ததோ அது தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 100 என்றால் ரூ. 100, லட்சம்  என்றால் லட்சம் என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொகை பெரிதா சிறியதா என்பதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என  கைவிரித்தார்.



.

மூலக்கதை