பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து

துபாய்: 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பின்தான், பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது தடைபட்டது. பாதுகாப்பில் நிலவும் அச்சுறுத்தலை காரணம் காட்டி, முன்னணி அணிகள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தன.

தற்போது பாகிஸ்தானில் உலக லெவன் தொடர் நடைபெற, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பெரிதும் உதவி செய்துள்ளது. இது குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்ட அறிக்கையில், ‘’உலக லெவன் போட்டியை லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துவது, உலக கிரிக்கெட்டிற்கு நல்ல நாள்.

இது பிசிபியின் நீண்ட மற்றும் கடினமான பயணம்.

 தங்கள் சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்காமல், பாகிஸ்தான் ரசிகர்களும், வீரர்களும் வாடி வந்தனர். பாகிஸ்தானில் ஒரு சர்வதேச போட்டி நடைபெறுவது என்பது கிரிக்கெட் விளையாட்டிற்கும் நல்லதுதான்.

இரு அணிகளுக்கும், பிசிபிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். சஷாங்க் மனோகர் இந்தியாவை சேர்ந்தவர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை