30 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு அமெரிக்காவை புரட்டி எடுத்த இர்மா புயல்: வீடுகள், சாலைகள் சேதம், புயலுக்கு 24 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
30 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு அமெரிக்காவை புரட்டி எடுத்த இர்மா புயல்: வீடுகள், சாலைகள் சேதம், புயலுக்கு 24 பேர் பலி

புளோரிடா : இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்டுள்ளது. இந்தப் புயலுக்கு வீடுகள் இடிந்து, மரங்கள் சாய்ந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழப்பட்டு 24 நபர்கள் பலியாகியுள்ளனர்.

இர்மா புயல் மணிக்கு 180  கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் வீசியதோடு  அதனுடன் சேர்ந்து கனமழையும்  கொட்டுவதால், கட்டிடங்கள் இடிந்து, மரங்கள் வேரோடு பிடிங்கி எறியப்பட்டு,  பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 30 லட்சம் வீடுகளில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் சிக்கி தவிக்கின்றனர்.

புளோரிடாவின் தாழ்வான பகுதியான கீஸ் தீவை நேற்று காலை 7 மணிக்கு புயல் தாக்கத் தொடங்கியது. புயல் நகர நகர மணிக்கு 180 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியது.

அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் உலகிலேயே 2 வது அதி பயங்கர புயலாகும்.

நேற்றும் இன்றும் கரீபியன் தீவுகள், கியூபாவை சூறையாடியவிட்டு அங்கிருந்து வேகமாக  நகர்ந்து   அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இர்மா புயலையொட்டி, கடந்த ஒரு வாரமாக புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் முகாம்களில் பெரும்பாலான மக்கள் தஞ்சமடையத் தொடங்கினர்.   மாகாணம் முழுவதற்கும் புயல் அபாயம் இருப்பதால், ஒட்டு மொத்த மக்களும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அப்படி வெளியேறிய மக்கள் அங்குள்ள பாதுகாப்பான கட்டிடங்களான பள்ளிகள், சர்ச், விளையாட்டு உள் அரங்கங்கள் என 400 க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



புயலை பயன்படுத்தி அடகுன் கடை, விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கொளையடித்தனர். மேலும் சில இடங்களிலுள்ள ஷாப்பிங் கடைகளில் நுழைந்து திருடியவர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்க்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்படுள்ளனர்.

கடுமையான புயலையொட்டி, புயல் பாதிப்புக்கு ஆளான மாகாணத்தின் அனைத்து நகரங்களிலும்  அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் 100 க்கும் மேற்பட்ட  மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.



இர்மா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் சந்தோஷ் ஜா கூறுகையில், கடந்த 48 மணி நேரமாக தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு அட்லாண்டிக் தீவுகளின் அனைத்து பகுதிகளில் மூர்க்கமாக தாக்கியுள்ளது. இந்த நிலையில் புயல் தாக்கியுள்ள மாகாணங்களில் வாழும் இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம்.

இதுவரை இந்தியர்களுக்கு எந்த வித சிக்கலும் இல்லை. அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கபட்டுள்ளது.

அனைத்து  மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம். மேலும் அவர்களுக்கு தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக முழு தூதரகமும்  பணியாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை