யு.எஸ்.ஓபன் டென்னிஸ் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி: ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
யு.எஸ்.ஓபன் டென்னிஸ் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி: ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான யு. எஸ். ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த  மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டி ஒன்றில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில், லாத்வியாவின் அன்ஸ்டாசிஜா  செவஸ்டோவாவை வீழ்த்தினார்.

24 வயதாகும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், யு. எஸ். ஓபனில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்பின் நடந்த  மற்றொரு கால் இறுதி போட்டியில், 9ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில், செக் குடியரசின் பெட்ரா  கிவிட்டோவாவை வீழ்த்தினார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 23வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள, 37 வயதாகும் வீனஸ் வில்லியம்ஸ், சக  நாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார். வெற்றிக்கனியை பறிக்க வீனஸ் வில்லியம்சுக்கு 2 மணி நேரம் 34 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இந்த ஆண்டில்  மட்டும் 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் அரையிறுதி சுற்றுக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   அமெரிக்காவின் மேடிசன் கீஸ், கோகோ வாண்டேவேகெ ஆகியோரும் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 அவர்கள் இருவரும் வெற்றி பெறும் பட்சத்தில்  அரையிறுதியில் விளையாடும் அனைவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. முன்னதாக நேற்று நள்ளிரவு நடந்த, ஆண்கள் ஒற்றையர் பிரிவு  கால் இறுதி போட்டி ஒன்றில், ஸ்ெபயின் நாட்டின் பாப்லோ கரீனோ பஸ்டா, 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில், 29ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டியாகோ  ஸ்க்வார்ட்ஸ்மேனை வீழ்த்தினார்.

ஒரு மணி நேரம் 58 நிமிடங்களில் போட்டி முடிவடைந்தது. கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் அரையிறுதிக்கு  முதல் முறையாக  முன்னேறியுள்ள, 12ம் நிலை வீரரான பாப்லோ கரீனோ பஸ்டா, அமெரிக்காவின் சாம் குயரி அல்லது தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோரில்  ஒருவரை எதிர்கொள்ள உள்ளார்.

பாப்லோ கரீனோ பஸ்டா கூறுகையில், ‘’நம்ப முடியவில்லை. நான் கண்ட கனவு இதுதான்.

அரையிறுதி போட்டியை ஆர்வத்துடன்  எதிர்நோக்கி உள்ளேன்’’ என்றார்.





.

மூலக்கதை