மியான்மர் அதிபர் ஹதின் கியாவுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மியான்மர் அதிபர் ஹதின் கியாவுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

நேபிதாவ்,:சீனாவில் இரண்டு நாள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்து விட்டு அரசுப் பயணமாக மியான்மர் சென்றுள்ள பிரதமர் மோடியை மியான்மர் அதிபர் ஹதின்  கியாவ் வரவேற்றார். அதன் பிறகு நேற்று இரவு மியான்மர் அதிபர் ஹதின் கியாவ் கொடுத்த  இரவு  விருந்தில் கலந்து கொண்டார். இரு நாடுகளிடையே உறவை மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் ஹதின் கியாவ், ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோருடன் இன்று காலை  பேச்சுவார்த்தை  நடத்தினார்.   இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, வர்த்தகம், நிதி முதலீடு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, கலாசாரம் ஆகியவை முக்கிய  விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மியான்மரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆனந்தா என்னும் பழமையான  இந்து கோயில்    நிலநடுக்கத்தில் சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த கோயிலை சீரமைக்கும் பணியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள்  ஈடுபட்டு கோயிலை மீண்டும் சரிசெய்தனர்.

பழமையான கோயில் என்பதால் இந்தக் கோயிலிலும்  பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.

மேலும் மியான்மரில் ராகினே  மாகாணத்தில் ரோஹிங்யா போராளிகளுக்கும், அந்நாட்டு அரசு படைக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இதனால்  ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து உள்ளனர். இந்தியாவில் மட்டும் சட்டவிரோதமாக 70 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கி இருக்கின்றனர்.

இந்த பிரச்சினை குறித்தும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் பேசினார். அடுத்ததாக மோடி  மியான்மர் மற்றும் பாகான், ரங்கூனில் வாழும் இந்தியர்களையும், இந்திய வம்சாவளிகளையும்  சந்தித்து பேசுகிறார். அதற்கு முன்பாக  இந்தியாவின் நிதி உதவியோடு மியான்மாரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட இருக்கிறார்.



.

மூலக்கதை