யு.எஸ்.ஓபன் டென்னிஸ் நம்பர்-1 வீரர் நடால் கால் இறுதிக்கு தகுதி: கரோலினா பிளிஸ்கோவா முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
யு.எஸ்.ஓபன் டென்னிஸ் நம்பர்1 வீரர் நடால் கால் இறுதிக்கு தகுதி: கரோலினா பிளிஸ்கோவா முன்னேற்றம்

நியூயார்க்: ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு. எஸ். ஓபன் நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி  நேற்று இரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால்-64ம் நிலை வீரரான  உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவ் பலப்பரீட்ைச நடத்தினர்.

இதில், 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் எளிதாக வெற்றி பெற்றார். 1 மணி  நேரம் 41 நிமிடங்களில் போட்டி நிறைவுக்கு வந்தது.

4 ஆண்டுகளில் முதல் முறையாக யு. எஸ். ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள ரபேல் நடால், ரஷ்யாவின்  ஆண்ட்ரே ரூபெலவ்வை எதிர்கொள்கிறார். 19 வயதேயாகும் டீன் ஏஜரான ஆன்ட்ரே ரூபெலவ், 9ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபினை, 7-5, 7-6 (7-5), 6-3 என்ற  செட் கணக்கில் வீழ்த்தினார்.



வெற்றியை பறிக்க ஆன்ட்ரே ரூபெலவுக்கு, 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தேவைப்பட்டது. இதன்மூலம் 2001ம் ஆண்டு அமெரிக்காவின் ஆன்டி  ரோடிக்கிற்கு பிறகு, யு. எஸ். ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை ஆன்ட்ரே ரூபெலவ் படைத்துள்ளார்.

மிக வேகமாக வளர்ந்து வரும்  வீரராக கருதப்படும் ஆன்ட்ரே ரூபெலவ், கால் இறுதி சுற்றில், ரபேல் நடாலுக்கு கடும் போட்டியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரவரிசையில் 53வது  இடத்தில் உள்ள ஆன்ட்ரே ரூபெலவ், தொடரின் 7ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை, 2ம் சுற்றில் வீழ்த்தினார் என்பது கவனிக்கத்தக்கது.

மகளிர்  ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா-உலகின் 91ம் நிலை வீராங்கனையான  அமெரிக்காவின் ஜெனீபர் பிராடி பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற, கரோலினா பிளிஸ்கோவாவுக்கு வெறும் 46  நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.



கால் இறுதி சுற்றில், தொடரின் 20ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வாண்டேவேகெவுடன் மோதவுள்ளார்  கரோலினா பிளிஸ்கோவா. 2015ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் விளையாடியவரான செக் குடியரசின் லூசி சபரோவாவை, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில்  வீழ்த்தியதன் மூலம் கோகோ வாண்டேவேகெ கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.



ரபேல் நடாலுக்கு எச்சரிக்கை!
ஆன்ட்ரே ரூபெலவ்விடம் தோல்வியடைந்த டேவிட் கோபின் கூறுகையில், ‘’ஆன்ட்ரே ரூபெலவ்விடம் அதிக ஆற்றல் உள்ளது. சிறப்பாக விளையாடுகிறார்.

ஆக்ரோஷமான  குணமுள்ள அவர், போட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் தன்னை மேம்படுத்தி கொள்கிறார். மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுப்பார் என நம்புகிறேன்.

ஆன்ட்ரே ரூபெலவ்  அபாயகரமான வீரர் என்பதால், கால் இறுதியில் ரபேல் நடால் எச்சரிக்கையுடன் விளையாடுவது அவசியம்’’ என்றார். ஆன்ட்ரே ரூபெலவ் கூறுகையில், ‘’உண்மையில்  ரபேல் நடால் சாம்பியன்.

இது கால் இறுதி போட்டிதான். என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

இதனால் அழுத்தம் இல்லாமல், போட்டியை ரசித்து விளையாட  முயல்வேன்’’ என்றார். ஆனால் ஆன்ட்ரே ரூபெலவ் அழுத்தம் இல்லாமல் விளையாட முடியும் என்பதை ஏற்க முடியாது என ரபேல் நடால் கருத்து தெரிவித்துள்ளார்.
 
கால் இறுதியில் பெடரர்-டெல்போ
அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ (டெல்போ), 1-6, 2-6, 6-1, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை கடுமையாக போராடி  வீழ்த்தினார்.

3 மணி நேரம் 35 நிமிடங்கள் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. கால் இறுதி சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை அவர் எதிர்கொள்கிறார்.

ரோஜர்  பெடரர், 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில், ஜெர்மனியின் பிலிப் கொல்சிரெய்பரை வீழ்த்தியதன் மூலம், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 போட்டிகளும் இன்று  காலை நடைபெற்றன.



.

மூலக்கதை