ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிரொலி ஐ.நா சபை இன்று அவசரமாக கூடுகிறது: வடகொரியாவுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிரொலி ஐ.நா சபை இன்று அவசரமாக கூடுகிறது: வடகொரியாவுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

நியூயார்க்: வடகொரியா நேற்று அணு ஆயுத சோதனை நடத்தியது குறித்து விவாதிக்க இன்று ஐ. நா. சபை  அவசரமாக கூடுகிறது. வடகொரியா பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில்  ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முன்பு வடகொரியா  நடத்திய அணுகுண்டு சோதனைகள் எல்லாம்  அமெரிக்காவிற்கு நேரடியாக எச்சரிகை விடுத்ததோடு,  நேரடியாகவே அமெரிக்காவை எதிர்த்தும் வந்தது.      கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.   அந்த அணிவகுப்பில் தடை செய்யப்பட்ட அணு ஆயுதங்கள் இடம் பெற்றதாக பல்வேறு நாடுகள் புகார் கூறியது.

இதனால் சர்வதேச அளவில் பல நாடுகளின்  கண்டனங்களையும் எதிர்கொண்டது வடகொரியா.   ஆனாலும்  வட கொரியா அதோடு நிற்கவில்லை. மீண்டும் தொடர் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது.



 இதனால் வட கொரியா மீது பல்வேறு நாடுகள் புகார் அளித்தன. இதையடுத்து  ஐ. நா.

சபை வடகொரியாவை கண்டித்தது. ஆனாலும் பல்வேறு நாடுகளின்  எதிர்ப்பையும்  மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

இதனால் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கும்படி  ஐ. நா. சபையில் அமெரிக்கா  வலியுறுத்தியது.

இதற்கு அமெரிக்க ஆதரவு நாடுகளும் ஆதரவு தெரிவிக்க ஐ. நா. சபையும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஐ. நா கொண்டு வந்த   பொருளாதாரத் தடையை வட கொரியா பொருட்படுத்தவில்லை.   அதன் பிறகு  ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா நடத்தியது.

’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல்  வெற்றிகர ஏவுகணைச் சோதனை என கூறிய வடகொரியா அதிபர் கிம் ஜோங்  இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என அறிவித்தார்.   வடகொரியாவின்  இந்த பேச்சுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.

இந்த நிலையில் நேற்று வடகொரியா சுங்ஜிபேகாம் பகுதியில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியது.

இதனால் அப்பகுதியில் 6. 3 ரிக்டர் அளவில் நில  நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் வந்த பிறகே வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தி இருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட  வடகொரியா அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்தது.
  இந்த  அணுகுண்டு சோதனைக்கு உலக அளவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க், நேற்று, ‘வட  கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள் அனைத்தும் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறுகின்றன.

இதனால், உலக நாடுகள் அனைத்தும் தங்களது கவனத்தை வட  கொரியாவின் பக்கம் திருப்பியுள்ளது.

வடகொரியாவை பல்வேறு முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. வடகொரியா நடத்தி வரும்  விஷமத்தனமான  காரியங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டிய சூழலில் உள்ளோம்’ என மிக காட்டமாக அறிக்கை விடுத்துள்ளார்.   இந்த நிலையில்  அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஐ. நா. சபை அவசர கூட்டம் இன்று நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.



.

மூலக்கதை