கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக அரியலூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி வந்தனர். திருச்சி விமான நிலையத்தில் அவர்களுக்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் நேராக அரியலூருக்கு புறப்பட்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அரியலூருக்கு சென்றார்.

விழா மேடை அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இதனை ஏராளமானவர்கள் பார்த்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்.ஜி.ஆர். பற்றிய கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள், ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

நேற்று மாலை 4 மணி அளவில் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் - அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் முதலில் விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். உருவ படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆர். வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த விழாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். 11,514 பயனாளிகளுக்கு ரூ.86 கோடியே 71 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மக்களுக்கு எதுவும் செய்யாமல் மக்கள் தலைவர் என்று சொல்பவர்களை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர்.வழியில் ஆட்சி அமைத்த ஜெயலலிதா தமிழகத்தை குடிசைகள் இல்லா மாநிலம் ஆக்க வேண்டும் என பாடுபட்டார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தார்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் மக்களின் பக்கம் நாம் இருக்கிறோம்.

நாம் எல்லோரும் ஒரே அணியில் நின்று இந்த ஆட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாசப்பிணைப்புடன் இருந்து அம்மா ஆசையை நிறைவேற்ற வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சிறிய கதையை கூறுகிறேன்.

ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அந்த சாமியார் ஒரு கிராமத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக சென்றார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஒவ்வொரு வரும் தனித்தனியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், விரோதிகள் போல் இருந்தார்கள். அதை கண்ட சாமியார் நீங்கள் இப்படி இருந்தால் இந்த ஊர் எப்படி முன்னேறும். இன்னும் ஒரு வாரம் கழித்து நான் இந்த கிராமத்திற்கு மீண்டும் வருவேன்.

அப்போது நீங்கள்அனைவரும் ஒற்றுமையோடு இருப்பதை நான் பார்க்க வேண்டும் என கூறி அவர்கள் ஒவ்வொருவரிடமும் கையில் கட்டிக்கொள்ளும் 3 கயிறுகளை கொடுத்தார். இந்த கயிறுகளை கொண்டு சென்று ஒவ்வொருவரும் உங்களுக்கு பிடித்தமான 3 பேரின் கையில் கட்டுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். அவர்களும் தங்களுக்கு பிடித்தமானவர்கள் கையில் அந்த கயிறுகளை கட்டினார்கள். மறுமுறை சாமியார் அந்த கிராமத்திற்கு சொற்பொழிவாற்ற வந்த போது அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தார்கள்.

இந்த கதை எதற்காக கூறினேன் என்றால் கட்சிக்கும். ஆட்சிக்கும் ஒற்றுமையுடன் இருந்து வலு சேர்க்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்காக பாடுபட வேண்டும்.

3 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் இருக்கும் வரை மக்கள் இதயத்தில் இருந்து இந்த அரசை ஒரு போதும் பிரிக்க முடியாது. நேற்று வரை நம்மோடு இருந்தவர்கள் இப்போது இந்த அரசு ஊழல் அரசு என்கிறார்கள். அதற்கான பதிலை அவர்களது மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மூலக்கதை