போதை பொருள் கடத்தல் : இந்தியருக்கு ஆயுள் சிறை

தினமலர்  தினமலர்
போதை பொருள் கடத்தல் : இந்தியருக்கு ஆயுள் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்திய வழக்கில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு, ஆயுள் தண்டனையும், 24 கசையடியும் வழங்க, அந்த நாட்டு கோர்ட், உத்தரவிட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிப்பவர், சரவணன் சந்த்ராம். கார் டிரைவரான இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 2014ல், இவரது காரிலிருந்து, 5 கிலோ போதை பொருட்களை, போலீசார் கைப்பற்றினர். சரவணனை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது; அப்போது, சரவணன் சார்பில் ஆஜரான வக்கீல் ரத்னம் கூறியதாவது:
மலேஷியாவின் ஜோகர் மாகாணத்தில், போதைப் பொருள் வியாபாரியான ஆயா என்பவரிடம், சரவணன், டிரைவராக பணியாற்றி வந்தார். தன் மகனின் அறுவை சிகிச்சைக்காக, ஆயாவிடம், டிரைவர் சரவணன், 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்; இந்த பணத்தை, அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து, 10 பாக்கெட் புகையிலையை விற்று தரும்படி, சரவணனிடம் ஆயா கூறினார். சரவணனும், அதை நம்பி, புகையிலை கட்டுகளை சிங்கப்பூருக்கு எடுத்து வந்தார். அப்போதுதான், போலீசாரிடம் சிக்கினார். சரவணனுக்கு, ஆயா கொடுத்தது போதை பொருள் என்பது, அப்போதுதான் தெரிந்தது; அதனால், அவர் குற்றவாளியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால்,போலீஸ் தரப்பு, இதை மறுத்தது. 'சம்பவம் நடந்த காலத்தில், சரவணனின் வங்கி கணக்கில் அதிக பணம்,'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. போதை பொருளை கடத்தி விற்கும் நோக்கில்தான், சரவணன் எடுத்து வந்தார்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரவணனுக்கு, ஆயுள் முழுவதும் சிறை தண்டனையும், 24 கசையடியும் விதித்து உத்தரவிட்டது.

மூலக்கதை