உங்களிடம் உதவி கேட்கவில்லை, மரியாதையுடன் நடத்துங்கள் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் பதில்

PARIS TAMIL  PARIS TAMIL
உங்களிடம் உதவி கேட்கவில்லை, மரியாதையுடன் நடத்துங்கள் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் பதில்

டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். டொனால்டு டிரம்ப் பேச்சை அடுத்து பாகிஸ்தானுக்கு அடுக்கடுக்காக நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிகாரிகளின் எச்சரிக்கையானது இருந்து வருகிறது. அமெரிக்காவின் இதுபோன்ற அறிக்கைகளால் பாகிஸ்தான் அரசின் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

 பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அமைதியைதான் விரும்புகிறோம், பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியது. பாகிஸ்தானுக்கு சீனா தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு பாகிஸ்தானுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து பொருள் மற்றும் நிதி உதவியை நாடவில்லை, அமெரிக்கா நம்பிக்கையுடனும், மரியாதையுடன் எங்களை நடத்த வேண்டும் என அமெரிக்க தூதரிடம் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ராவல்பிண்டியில் அமெரிக்கா தூதர் டேவிட் ஹெலே, பாஜ்வாவை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.  டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என கூறியதும் முக்கியத்துவம் பெற்றது. இதற்கு பாஜ்வா கடுமையான பதிலை உரைத்து உள்ளார். “நாங்கள் அமெரிக்காவிடம் இருந்து பொருள் அல்லது நிதிஉதவியை எதிர்பார்க்கவில்லை, எங்களுடைய பங்களிப்புக்கு நம்பிக்கை, புரிதல் மற்றும் அங்கீகாரத்தையே எதிர்பார்க்கிறோம்,” என கூறிஉள்ளார் பாஜ்வா.

பாகிஸ்தான் ராணுவ மீடியா தகவலின்படி ஆப்கானிஸ்தானில் அமைதி என்பது பாகிஸ்தானுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதையும் அமெரிக்க தூதரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது, அதற்காக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கையையும் பட்டியலிட்டு உள்ளது என தெரிகிறது.

மூலக்கதை