பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ

பல்லேகலெ: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றிய நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தம்புலாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் போட்டி பல்லேகலெ மைதானத்தில் நாளை நடக்கிறது. இலங்கை மண்ணில் தொடர் வெற்றிகளை குவிக்கும் உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது.

பேட்டிங்கில் தவான் தொடர்ந்து அசத்தி வருகிறார். டெஸ்ட் தொடரில் 2 சதத்துடன் 358 ரன் குவித்த தவான் முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 132 ரன் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார்.

கேப்டன் கோஹ்லி, லோகேஷ் ராகுல், டோனி, கேதர்ஜாதவ், பாண்டியா என பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ரோகித் சர்மா மட்டும் இலங்கை மண்ணில் தடுமாறி வருகிறார்.

அக்‌ஷர்பட்டேல், சாஹல், பும்ரா ஆகியோர் தம்புலாவில் பந்து வீச்சில் அசத்தினர். அசுர பலத்துடன் உள்ள இந்தியா, இலங்கையில் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்யும் உற்சாகத்தில் நாளை களம் இறங்க காத்திருக்கிறது.

பரிதாப இலங்கை: மறுபுறம் சொந்த மண்ணில் இலங்கை தடுமாறி வருகிறது.

மேத்யூஸ், தரங்கா, டிக்வெல்லா, மெண்டிஸ், குணதிலகா, கபுகேதரா என பேட்ஸ்மேன்கள் இருந்தும் ரன் குவிக்க தடுமாறி வருகின்றனர். டெஸ்ட் தொடரின் சொதப்பல் ஒன்டேவிலும் தொடர்கிறது.

பந்து வீச்சிலும் அனுபவ வீரர்கள் யாரும் இல்லை. யார்க்கரால் மிரட்டும் மலிங்கா அண்மை காலமாக விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இந்திய அணிக்கு எதிராக வெற்றிபெற முடியாவிட்டாலும் சவாலை கூட அளிக்க முடியாமல் சரணடைந்து வருவதால் வீரர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். உள்ளூர் மைதானங்களில் தொடர் தோல்வியால் ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.

இதனால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2. 30 மணிக்கு தொடங்குகிறது.
 
மழைக்கு வாய்ப்பு: போட்டி நடைபெறும் பல்லேகலெவில் நாளை 60 சதவீதம் மழை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை குறுக்கீடு இருந்தாலும் ஆட்டத்தில் ரிசல்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும்.

பயிற்சியாளர் கோபம்: இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ், வீரர்களை அடிக்கடி மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீரர்கள் சிறப்பாக பயிற்சி பெறுகின்றனர்.

அவர்களை குற்றம் சொல்ல முடியாது. அணியில் அடிக்கடி மாற்றம் செய்தால் மனரீதியாக வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அவர்களின் நம்பிக்கை போய் விடும். வீரர்கள் நிலையாக இருந்தால்தான் முன்னேற்றத்தைக் காண முடியும் என கூறி உள்ளார்.



சங்ககரா சமாதானம்: தொடர் தோல்வியால் நேற்று முன்தினம் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்சை ரசிகர்கள் சிறை பிடித்து கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம் என கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா கூறுகையில்,  ‘ வெற்றிபெற்றால் எங்களோடு சேர்ந்து கொண்டாடுகிறீர்கள். தோற்றால் எதிர்க்கிறீர்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும்தான் நம்அணிக்கு எப்போதும் முக்கியம். அணி பிரச்னையில் இருக்கும்போது உங்கள் ஆதரவு தான் பலமாக இருக்கும்.

அதுதான் அணிக்கு இப்போதைய தேவை என கூறி உள்ளார்.

ஒரு போட்டியிலும்
 
இந்தியா வெற்றி: பல்லேகலெ மைதானத்தில் இந்தியா இதற்கு முன் ஒருநாள் போட்டியில் ஒன்றில் மட்டுமே விளையாடி இருக்கிறது.

2012ம் ஆண்டு ஆக. 4ம் தேதி நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழந்து 294 ரன்குவித்தது. இலங்கை 274 ரன்னுக்கு ஆல்அவுட் ஆக 20 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.




பிட்ச் ரிப்போர்ட்

பேட்டிங்கிற்கு சாதகமான பல்லேகலெ மைதானத்தில் அதிகபட்சமாக இலங்கை அணி 2011ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 327/6 ரன் எடுத்திருக்கிறது. ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக தில்சான் 144 ரன் எடுத்திருக்கிறார்.

இந்திய வீரர்கள் காம்பீர் 88 ரன் எடுத்திருக்கிறார். இந்த மைதாத்தில் மொத்தம் 18 ஒருநாள் போட்டி நடந்துள்ளது.

இதில் 9ல்  2வது பேட்டிங் செய்த அணியும்,. 8ல் முதலில் பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளது.

ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இங்கு 12 போட்டியில் ஆடி இருக்கும் மலிங்கா 23 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இந்திய தரப்பில் இர்பான் பதான் ஒரு போட்டியில் ஆடி 5 விக்கெட் எடுத்திருக்கிறார். ஆஸி.

வீரர் ஜான்சன் 31 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது தான் ஒரு இன்னிங்சில் பெஸ்ட் பவுலிங்.

.

மூலக்கதை