இந்தியாவில் காச நோய்க்கு 2 ஆண்டுகளில் 55 ஆயிரம் குழந்தைகள் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் காச நோய்க்கு 2 ஆண்டுகளில் 55 ஆயிரம் குழந்தைகள் பலி

லண்டன்: இந்தியாவில் காச நோய்க்கு கடந்த 2 ஆண்டுகளில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியானதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த லான்செட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் காச நோய்க்கு அதிகமான குழந்தைகள் பலியாகும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில், கடந்த 2015ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 15 நாடுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் முறையான பரிசோதனை இல்லாதது, நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆகியவையே இதன் பாதிப்புக்கு அதிக காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

2015ல் காச நோய் காரணமாக 217 நாடுகளில் 14 வயதுக்கும் குறைவான 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிகிறது. இவர்களில் 80 சதவீதம் குழந்தைகள் 5 வயதிற்கும் குறைவானவர்கள்.



இந்த வயது பிரிவில் உள்ளவர்களுக்கு ஏற்படும் மரணங்களில் காசநோய் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என்று இங்கிலாந்து பல்கலை பேராசிரியர் பீட்டே டோட் தெரிவித்துள்ளார்.   காச நோய் தடுக்கக் கூடியதும், தீர்வு காணக்கூடிய ஒன்றுமாகும்.   96 சதவீத குழந்தைகள் இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளாத காரணத்தினாலேயே இறந்து போவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் காச நோயினால் இறப்பது அதிகம்.

இதில் இந்தியா, நைஜீரியா, சீனா, இந்தோனேஷியா, காங்கோ ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில்  ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பேருக்கு 400 என்ற அளவில் இந்நோயின் தாக்கம் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

எனவே காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உலக நாடுகள் குழந்தைகள் மீதான காசநோய் பாதிப்பு குறித்து அறிக்கையை தொடர்ந்து அனுப்பும்படி உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை