ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம்பேர் பங்கேற்பு

விகடன்  விகடன்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம்பேர் பங்கேற்பு

 ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடத்தும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆர்ப்பாட்டம், தலைமைச்செயலகத்தை முற்றுகையிடுதல் போராட்டங்களை நடத்திய ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், இன்று  மூன்றாம்கட்ட போராட்டமாக, மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டுள்ளனர். 


 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 80 சதவிகிதம் பேர் இன்று தஙகள் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுமைக்கும் 6,847 ஆண்கள், 3,159 பெண்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  கலந்துகொண்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயின. இதேபோல, தனியார் பள்ளிகளைத் தவிர, அரசுப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 


 வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி, ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட  எட்டு  இடங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அரசு ஊழியர் சங்கச் செயலாளர்  கருணாநிதி, பரமக்குடி ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சேகர் , கமுதியில் ஆசிரியர் முத்து முருகன்,  ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி  ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஜெயசீலன், உமையராஜ், ஜெயகாந்தன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி மரிய பசானியோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். 
 இந்ந போராட்டத்துக்குப் பின்னரும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், செப்டம்பர் 7 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ  கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை