துணை ஜனாதிபதி பதவி அசவுகரியமாக இருக்கிறது: வெங்கய்யா நாயுடு பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
துணை ஜனாதிபதி பதவி அசவுகரியமாக இருக்கிறது: வெங்கய்யா நாயுடு பேச்சு

ஐதராபாத்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு தெலங்கானா அரசு சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. ஐதராபாத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், கவர்னர் நரசிம்மன், முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வெங்கய்யா நாயுடு பேசியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையில், நாடாளுமன்றமும், சட்டப் பேரவைகளும் ஆலோசனை, விவாதம், முடிவு ஆகியவற்றை எடுக்கும் அமைப்புகளாகச் செயல்பட வேண்டும் என்றார். இடையூறுகள் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தால் ஏதேனும் திட்டம் கொண்டு வரப்படும்போது, அதை எதிர்க்கட்சிகள் நிராகரிக்கும்; அதன் மீது நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும்தான் முடிவெடுக்கும். அதாவது, திட்டத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கும்.

இதுதான் உண்மையான கொள்கையாகும். நாடாளுமன்றத்தில் அண்மை காலமாக இடையூறுகள் அதிகளவில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

இது தவிர்க்கப்பட வேண்டும். ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் விவாதத்தில் கலந்து கொள்வதுடன், மக்கள் நலனுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்.

இடையூறுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. இது நாடாளுமன்றத்துக்கு மட்டுமன்றி, மாநில சட்டப் பேரவைகள், சட்டமேலவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

அரசியல்வாதியாக இருந்தபோது, நாட்டு மக்களை சந்தித்ததைவிட, குடியரசு துணைத் தலைவராக இருந்து கொண்டு மக்களைச் சந்திப்பதை அசவுகரியமாக உணருகிறேன்.

இந்த உணர்வில் இருந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.

.

மூலக்கதை