பாஸ்போர்ட் வினியோக தாமதத்தை தவிர்க்க விரைவில் ஆன்லைன் சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஸ்போர்ட் வினியோக தாமதத்தை தவிர்க்க விரைவில் ஆன்லைன் சோதனை

புதுடெல்லி: பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க ஆன்லைனில் சோதனை செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு விரைவில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களிடம் போலீசார் வெரிபிகேஷன் செய்வார்கள். இந்த நடைமுறையை ஆன்லைன் மூலமாக முறைப்படுத்த தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.   சமீபகாலமாக போலீசார் வெரிபிகேஷன் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் வெரிபிகேஷன் செய்யும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசு தேசிய அளவிலான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் நெட்வொர்க் மற்றும் சிஸ்டம் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முயற்சி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முழுமை பெறும் நிலையில் உள்ளது.

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரத்து 398 காவல் நிலையங்கள் டிஜிட்டல் பிளாட்பாரத்தில் இணைக்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் பொது மக்கள் குற்றங்கள் குறித்த புகார்களை ஆன்லைனில் அளிக்க முடியும்.

மேலும் பாஸ்போர்ட் போன்றவற்றிற்கு போலீசார் ஆன்லைன் மூலமாகவே ஆய்வு மேற்கொள்ள முடியும். இதன் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதில் உள்ள கால தாமதம் வெகுவாக குறையும்.

மத்திய அரசின் இந்த தேசிய அளவிலான டிஜிட்டல் போலீஸ் போர்ட்டல் தளமானது மாநில அரசுகளிடம் ஏற்கனவே உள்ள காவல்துறை டிஜிட்டல் தரவுகளுடன் இணைக்கப்பட்டு முழுமையான நெட்வொர்க்கிங் செய்யப்பட உள்ளது.

அதே போல் காவல்துறை சார்ந்த பல்வேறு புலனாய்வு துறையினரும் இந்த தேசிய தகவல் நெட்வொர்க்கில் குற்றங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை தேடி பெற முடியும். ஏற்கனவே தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்த தகவல் மையத்தின் உதவியுடன் பாஸ்போர்ட் வழங்கும் முறை மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வந்து விடும் என உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை