டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து மனு: தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து மனு: தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு

சென்னை: முதல்வரை மாற்ற வேண்டும், துணை முதல்வர் நியமனம் செல்லாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்து மனு அளித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக 2 அணிகளிளாக பிரிந்தது.

சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி அணியாக செயல்பட தொடங்கியதால், எடப்பாடி அணி, டிடிவி தினகரன் அணி, பன்னீர்செல்வம் அணி என மூன்று அணிகளாக பிரிந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்குபின், எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன.

இது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இரு அணிகள் இணைக்கப்பட்டுள்ளது டிடிவி தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் 36 எம்எல்ஏக்கள் தினகரனை ஆதரித்த நிலையில் தற்போது 19 எம்எல்ஏக்களே அவர் பக்கம் உள்ளனர்.

அணிகள் இணைப்பு தீவிரமாக நடந்து வந்த நிலையில் நேற்று தன் இல்லத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர்.

டிடிவி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதேநேரத்தில், கட்சி அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழா கூட்டத்தில், ஓபிஎஸ் தரப்பினர் சசிகலாவை நீக்க பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தனர்.

சசிகலாவை நீக்கினால் தாங்களும் அதிரடி நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் அணியினர் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா சமாதிக்கு நேற்று இரவு சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் கவர்னரை இன்று சந்திக்க இருப்பதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலையும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், காலை 9. 50 மணிக்கு 7 கார்களில் வெற்றிவேல்(பெரம்பூர்), தங்க  தமிழ்செல்வன்(ஆண்டிப்பட்டி), பழனியப்பன்(பாப்பிரெட்டிப்பெட்டி), ரங்கசாமி(தஞ்சை), ஜக்கையன்(கம்பம்), பாலசுப்பிரமணி(ஆம்பூர்), தங்கதுரை(நிலக்கோட்டை), மாரியப்பன்  கென்னடி(மானாமதுரை), கோதண்டபானி(திருப்போரூர்), முத்தையா(பரமக்குடி), செந்தில்பாலாஜி(அரவக்குறிச்சி), அருள் முருகன்(அரூர்),  ஏழுமலை(பூந்தமல்லி), சுப்பிரமணி(சாத்தூர்), சுந்தர்ராஜ்(ஒட்டப்பிடாரம்), கதிர்காமு(பெரியகுளம்), ஜெயந்தி(குடியாத்தம்), பார்த்தீபன்(சோளிங்கர்), உமா மகேஸ்வரி(விளாத்திகுளம்) என 19 எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.

அவர்களை சோதித்து எம்எல்ஏக்களின் பெயர்கள், வாகன எண்ணை போலீசார் குறித்து வைத்துக்கொண்டு உள்ளே அனுப்பினர்.

பின்னர் சரியாக 10 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை அவர்கள் சந்தித்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்.

துணை முதல்வராக பதவி ஏற்ற பன்னீர்செல்வம், ஏற்கனவே அரசுக்கு எதிராக வாக்களித்தவர். அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

தேர்தல் ஆணையத்தில் எதிராக மனு அளித்தவர்கள். இதனால் தேர்தல் ஆணைய முடிவு வராமல் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது தவறு என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர், முதல்வரை மாற்றுவது என்பது உங்களது உள்கட்சிப் பிரச்னை.

அதில் நான் தலையிட விரும்பவில்லை. உங்கள் மனு மீது விசாரணை நடத்துகிறேன் என்று கூறினார்.

இதனால் நிருபர்களை சந்திக்காமல், அவர்கள் பின்வாசல் வழியாக தினகரன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

.

மூலக்கதை