ஆஷ்ரம் பள்ளிக்கு களங்கம்: 5 கோடி நஷ்டஈடு கேட்டு ஐஸ்வர்யா வழக்கு

தினமலர்  தினமலர்
ஆஷ்ரம் பள்ளிக்கு களங்கம்: 5 கோடி நஷ்டஈடு கேட்டு ஐஸ்வர்யா வழக்கு

ரஜினியின் மனைவி லதாவும், மகள் ஐஸ்வர்யா தனுசும் இணைந்து கிண்டியில் ஆஷ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார்கள். கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள இந்த பள்ளி 2005ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கிண்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் பள்ளி நடந்து வந்தது.

இந்த நிலையில் 10 கோடி வாடகை பாக்கி தர மறுப்பதாகவும், சட்ட விரோதமான தனது இடத்தில் பள்ளி நடத்தி வருவதாகவும் நிலத்தின் உரிமையாளர் புகார் கூறினார். இந்த புகாரை மறுத்தும், அவர் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும் கூறி ஐஸ்வர்யா தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ராகவேந்திரா கல்வி சங்கம் 1991ல் பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் கீழ் ஆஸ்ரம் என்ற பெயரில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களில் பள்ளிகள் உள்ளன. கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பள்ளி கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளி சுமார் 33086 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. கிண்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தை குத்தகை அடிப்படையில், அவரிடமிருந்து ராகவேந்திரா கல்வி சங்கம் பெற்றது. சதுர அடி கணக்கில் வாடகையாக தர ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த மே மாதம் வரை வெங்கடேஸ்வரலுக்கு தரவேண்டிய வாடகை எவ்வித பாக்கியும் இல்லாமல் தரப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, மாலை 4:30 மணிக்கு வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது ஆட்கள் பள்ளியின் நுழைவுவாயிலை மூடி பள்ளி மற்றும் காலியிடத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மறுநாள் பள்ளியை திறக்க சென்றபோது, பள்ளியின் வாயில்கள் மூடப்பட்டிருந்தன.

அதுமட்டுமல்லாமல் வெங்கடேஸ்வரலுவும், வாரிசுகளும் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் அவர்கள் அளித்த பேட்டியில், பள்ளி வாடகையை செலுத்தவில்லை என்றும் அதனால் பள்ளி கட்டிடத்தை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறியுள்ளனர். கடந்த 2005ல் அந்த இடத்தில் பள்ளியை ஆரம்பித்தபோது சுமார் 5 கோடிக்கு மேல் செலவு செய்து தொழிற்சாலை இடமாக இருந்ததை பள்ளி வளாகமாக மாற்றினோம். பள்ளி நிர்வாகம் சார்பில் இட உரிமையாளருக்கும் எந்த பாக்கியும் வைக்காத நிலையில் பள்ளி வளாகத்தை சீல் வைத்தது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியைப் பூட்டி எங்கள் பள்ளியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, எங்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக நஷ்ட ஈடு தொகையாக ஒரு கோடியும், கல்வி சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் தருமாறு வெங்கடேஸ்வரலுவுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் உத்தரவிட வேண்டும். மேலும், வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது ஆட்கள் ஆஸ்ரம் பள்ளிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மூலக்கதை