'பாகுபலி 2' - சீனாவில் அனுமதி கிடைக்குமா ?

தினமலர்  தினமலர்
பாகுபலி 2  சீனாவில் அனுமதி கிடைக்குமா ?

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி மிகப் பெரும் வசூல் சாதனையை படைத்தது. தமிழ், தெலுங்கில் 100 நாட்களைக் கடந்தும் ஓடியது.

இப்படத்தினை சீனாவில் அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். சீனா உரிமையை முதல் பாகத்தை வாங்கிய நிறுவனமே குறைந்த விலைக்கு வாங்கியிருந்தது. முதல் பாகம் சீனாவில் பெரிய வசூலைப் பெறாததால் இரண்டாம் பாகத்தை குறைந்த விலைக்கே பாகுபலி தயாரிப்பாளர்கள் விற்றார்கள்.

ஆனால், 'பாகுபலி 2' படத்தை அடுத்த மாதம் சீனாவில் வெளியிட இதுவரை அரசாங்க அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே டோக்லாம் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீனா நாட்டவர் இந்தியாவிற்குள் சுற்றுப் பயணம் செல்லவும் சீனா அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு இந்தியத் திரைப்படம் சீனாவில் இந்த சமயத்தில் வெளியாவதை சீன அரசு விரும்பவில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் 'பாகுபலி 2' வெளியாகி வரவேற்பைப் பெற்றால்தான் 'தங்கல்' படத்தின் மொத்த வசூலை முறியடிக்க முடியும். சீனாவில் படத்தை வெளியிட வாங்கியுள்ள நிறுவனம் 'பாகுபலி 2' படத்தை வெளியிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள். எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.

மூலக்கதை