டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை இன்று சந்திக்கிறார்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை இன்று சந்திக்கிறார்கள்

தமிழக கவர்னரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து முறையிட உள்ளனர்.
அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மற்றொரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.

நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இரவு 8.25 மணிக்கு வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.ஜே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஜெயலலிதா நினைவிடம் வந்தனர். டி.டி.வி.தினகரன் வரவில்லை.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும், நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்தனர். 20 நிமிட தியானத்துக்கு பிறகு, ‘சசிகலா வாழ்க... டி.டி.வி.தினகரன் வாழ்க’ எனும் கோ‌ஷங்களுடன் நினைவிடத்தை சுற்றி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, இதே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூடி, பேசி, பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக சசிகலாவை ஏற்றோம். அதன்பிறகு இதே குழு தான் அவரை பொதுச்செயலாளர் மட்டுமல்ல முதல்–அமைச்சராகவும் வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தனர். இதனையும் ஏற்றோம்.

அதன்பின்னர் சிறைக்கு செல்ல நேரிட்டதால், சசிகலா முதல்–அமைச்சராக வரமுடியவில்லை. சிறைக்கு செல்லும் முன்பு, கூவத்தூரில் சசிகலா எங்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். அதில் 12 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்டனர்.
சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சூழ்நிலையில், எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்? சட்டசபையில் பட்டினியுடன் இந்த ஆட்சி அமையவேண்டும் என்று கட்டுப்பாட்டோடு இருந்தோம். வெற்றி பெற்றோம். வெற்றிக்கு காரணம் சசிகலா.

இன்றைக்கு ஜெயலலிதா அரசு மீண்டும் அமையத்தான் ஆட்சி நடத்துகிறீர்கள், நடத்தட்டும். பாராட்டுகிறோம். 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வைத்திருக்கிற, இந்த அரசை ஊழல் அரசு என்று கூறிய ஓ.பன்னீர்செல்வத்தை இவ்வளவு வலுக்கட்டாயமாக சேர்க்கவேண்டிய அவசியம் என்ன? அப்படி இருந்தும் அணிகள் இணைப்புக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுவிட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் ஒரு முடிவுக்கு வந்தார். ஆனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த, எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இது நியாயமா?
எடப்பாடி பழனிசாமி தலைமையின் அரசுக்காக, அந்த அரசின் வெற்றிக்காக உழைத்த எங்களின் நிலை என்ன? எங்களுக்கு யார் பாதுகாப்பு? யாரை கேட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள்? என்றே தெரியவில்லை. ஒரு மரியாதைக்கு கூட எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எங்களை மதிக்கவும் இல்லை. அதனால் தான் ஜெயலலிதா சமாதியில் இன்றைய தினம் கண்ணீர் விட்டு எங்கள் குறைகளை சொல்லி முறையிட்டு இருக்கிறோம். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.

பொதுக்குழு கூட்டி சசிகலாவை நீக்குவதாக கூறியிருக்கிறார்கள். அதற்கான தகுதியும், அத்தகைய முடிவு எடுப்பதற்கான அதிகாரமும் யாருக்கும் இல்லை. கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ, சேர்க்கவோ பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம் உண்டு. எனவே சசிகலாவை நீக்க போவதாக கூறுவது கண்துடைப்பு வேலை.

தமிழக கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். நாளை (இன்று) காலை 10 மணிக்கு இந்த சந்திப்புக்கு கவர்னர் அனுமதி அளித்திருக்கிறார். கவர்னரை சந்தித்து, இதுகுறித்து பேசுவோம். சந்திப்புக்கு பிறகு மற்ற வி‌ஷயங்களை உங்களிடம் தெரிவிக்கிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மூலக்கதை