சின்சினாட்டி டென்னிஸ் ஆடவர் பிரிவில் டிமிட்ரோவ் சாம்பியன்: மகளிர் பிரிவில் முகுருசாவுக்கு கோப்பை

தி இந்து  தி இந்து
சின்சினாட்டி டென்னிஸ் ஆடவர் பிரிவில் டிமிட்ரோவ் சாம்பியன்: மகளிர் பிரிவில் முகுருசாவுக்கு கோப்பை

சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26 வயதான டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆயிரம் புள்ளிகள் கொண்ட மாஸ்டர்ஸ் தொடரில் டிமிட்ரோவ் கோப்பை வெல்வது இதுவே முதன்முறையாகும். கோப்பையுடன் ரூ.6.11 கோடியை அவர் பரிசுத் தொகையாக தட்டிச் சென்றார். மேலும் இந்த ஆண்டில் முதன் முறையாக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 3, 710 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்தார். சின்சினாட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர், 11-வது இடத்தில் இருந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலப், 4-ம் நிலை வீராங்கனை யான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எதிர்த்து விளையாடினார். இதில் முகுருசா 6-1, 6-0 என்ற நேர் செட்டில் மிக எளிதாக வெற்றி பெற்று கோப்பையை வென்றார். இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அவருக்கு வெறும் 56 நிமிடங்களே தேவையாக இருந்தது.

முகுருசா இந்த ஆண்டில் வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டனிலும் அவர், பட்டம் வென்றிருந்தார். சின்சினாட்டி தொடரில் பட்டம் வென்ற 23 வயதான முகுருசாவுக்கு 900 புள்ளிகளுடன் ரூ.3.34 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முகுருசா, 3 இடங்கள் முன்னேறி 5,860 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். - ஐஏஎன்எஸ்

மூலக்கதை