அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்தன; அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்தன; அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தது.

இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சியின் காரணமாக, நீண்ட இழு பறிக்கு நேற்று சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, 195 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று ஒன்றாக இணைந்தன.

கவர்னர் மாளிகையில் மாலை 4.45 மணிக்கு நடந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

அவரை தொடர்ந்து கே.பாண்டியராஜன் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அமைச்சராக பதவி ஏற்ற கே.பாண்டியராஜனுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதோடு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இதுவரையில் அமைச்சர் ஜெயகுமார் பொறுப்பில் இருந்த நிதித்துறையும், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பில் இருந்த வீட்டு வசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசைமாற்று வாரியம், குடியிருப்பு கட்டுப்பாடு, நகர்புற ஊரமைப்பு, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுகிறது. அவர் துணை முதல்-அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பொறுப்பில் இருந்த தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாசாரம், கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பில் இருந்த தொல்லியல்துறை ஆகியவை கே.பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டு, இனி அவர் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாசார அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

பி.பாலகிருஷ்ணரெட்டி யிடம் இதுவரை இருந்த கால்நடைத்துறை, உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டு, இனி அவர் கால்நடைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பில் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இனி பி.பாலகிருஷ்ணரெட்டியிடம் ஒதுக்கப்படுகிறது. அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இதுவரை எம்.சி.சம்பத் வகித்து வந்த சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை, இனி சி.வி.சண்முகம் பொறுப்பில் ஏற்கனவே அவர் வகித்து வந்த பொறுப்புகளோடு கூடுதலாக கவனித்து வருவார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 

மூலக்கதை