நடுக்கடலில் கப்பல்கள் மோதல்

தினமலர்  தினமலர்
நடுக்கடலில் கப்பல்கள் மோதல்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அருகே, அமெரிக்க போர்க் கப்பலும், எண்ணெய் கப்பலும் நடுக்கடலில் மோதின; இதில், அமெரிக்க போர்க் கப்பல் பலத்த சேதமடைந்தது. இந்த கப்பலில் இருந்த, அமெரிக்க கடற்படை வீரர்கள், 10 பேர் கதி என்ன ஆனது என, தெரியவில்லை. அமெரிக்க கடற் படைக்கு சொந்தமான, 'ஜான் எஸ் மெக்கைன்' என்ற போர்க் கப்பல், எதிரிகளின் இலக்குகள் மீது ஏவுகணையால் தாக்கும் திறன் உடையது.இந்த கப்பல், நேற்று காலை, மலேஷியா கடல் பகுதி வழியாக, சிங்கப்பூர் துறைமுகத்துக்கு சென்றது. மலாக்கா ஜலசந்தி பகுதியில், லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் மீது, அமெரிக்க கப்பல் திடீரென மோதியது. இதில், அமெரிக்க கப்பல் சேதமடைந்தது. இந்த கப்பலில், 15 வீரர்கள் இருந்தனர். இவர்களில் ஐந்து வீரர்கள் மட்டும் மீட்கப்பட்டனர்.
மீதமிருந்த, 10 வீரர்களை விபத்துக்குப் பின் காணவில்லை. காணாமல் போன
வீரர்களை தேடும் பணியில் அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. லைபீரிவின் சரக்கு கப்பல், 30 ஆயிரம் டன் ஆயில் மற்றும் வேதிப் பொருட்களை ஏற்றி வந்துள்ளது.
இந்த பாரம் காரணமாகவே, அமெரிக்க கப்பல் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது, விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, டிரம்ப், ''அது ரொம்ப மோசம்,'' என, சர்வ சாதாரணமாக பதிலளித்து சென்று விட்டார்.
சில மணி நேரங்களுக்குப் பின், டிரம்ப், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நம் வீரர்களுக்காக பிரார்த்திப்போம்' என, பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை