மோகன்லாலின் முதல் டிவி ஷோவிற்கு வரவேற்பு எப்படி..?

தினமலர்  தினமலர்
மோகன்லாலின் முதல் டிவி ஷோவிற்கு வரவேற்பு எப்படி..?

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இறங்கி நிகழ்ச்சியை களைகட்ட செய்து வருகிறார் கமல். இதேப்போல் மலையாள சேனல் ஒன்றில் மோகன்லாலும் முதன்முறையாக சமூக அக்கறை உணர்வுடன் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கடந்தவாரம் முதல் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

வாரந்தோறும் வெள்ளி, சனி இரண்டு நாட்களிலும் ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி. இந்தநிலையில் கடந்த வெள்ளி, சனி அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே பரவலான கருத்துக்கள் தெரிவிக்கின்றன..

சமூகத்தின் அடித்தட்டு மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் போராடி சாதித்த விஷயங்களை அடையாளப்படுத்தி, அவர்களை போன்றவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியாகத்தான் இதை வடிவமைத்திருக்கிறார்கள். அதனால் தான் மோகன்லாலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கவில்லை. மாறாக நடிகை மீரா நந்தன் தான் தொகுத்து வழங்குகிறார்.. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது..

அடுத்ததாக நிகழ்ச்சியில் மஞ்சு வாரியார், நடிகர் மணியம்பிள்ள ராஜூ, ஷாஜி கைலாஷ் உள்ளிட்ட சில பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோகன்லாலை துதிபாடுவதை மட்டுமே செய்கின்றனர்.. ஒருவர் மேடையில் இல்லாதபோது அவரை பற்றி புகழ்வது வேறு.. மேடையில் இருக்கும்போதே, அதுவும் இதுபோன்ற சமூக நிகழ்ச்சியில் அவரை தேவதூதர் போல ஓவராக புகழ்ந்து தள்ளுவது நிகழ்ச்சியின் போக்கையே மாற்றிவிட்டதாக ரசிகர்களே கருதுகின்றனர்..

இதை மோகன்லாலும் ரசிக்கவில்லை என்பதையும் காண முடிந்தது. இனி வரும் நாட்களில் இந்த குறைகளை களைந்து மோகன்லாலுக்கும் பார்வையாளர்களுக்குமான நேரடி உரையாடல்கள் அதிகரித்தால் இந்த ஷோ நன்றாக இருக்கும் என சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மூலக்கதை