இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: தவானின் சிறப்பான ஆட்டம் நீடிக்க வேண்டும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: தவானின் சிறப்பான ஆட்டம் நீடிக்க வேண்டும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

தம்புல்லா: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி  டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. இதையடுத்து களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா 36 ரன் (44 பந்து, 4 பவுண்டரி), டிக்வெல்லா 64 ரன் (74 பந்து, 8 பவுண்டரி) எடுத்து நல்ல தொடக்கம் அளித்தனர்.

அதன்பின்னர் வந்தவீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 139 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்த இலங்கை அடுத்த 39 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்களை பறிகொடுத்தனர்.

முடிவில் 43. 2 ஓவரில் 216 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

மேத்யூஸ் 36 ரன்னுடன் (50 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 3, கேதர் ஜாதவ், சாஹல், பும்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர். எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோகித் சர்மா (4 ரன்) ரன்அவுட் ஆனார்.

பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோஹ்லியும் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஹசரங்காவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி விளாசிய தவான் 11வது சதத்தை பூர்த்தி செய்தார்.

மறுபுறம் 44வது அரைசதத்தை தாண்டி கேப்டன் விராட் கோஹ்லி அசத்தினார். இந்திய அணி 28. 5 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 220 ரன் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

ஷிகர் தவான் 132 (90 பந்து, 20 பவுண்டரி, 3 சிக்சர்), கோஹ்லி 82 ரன்னுடன் (70 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

2வது ஒரு நாள் போட்டி வரும் 24ம்தேதி பல்லகெலேவில் நடக்கிறது.

வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில, 300 ரன்கள் வரை சேசிங் செய்ய வேண்டியிருக்கும் என நினைத்தேன்.

பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. தவான் 3 மாதமாக அபாரமாக விளையாடி வருகிறார்.

அவரின் சிறப்பாக ஆட்டம் நீடிக்க வேண்டும். 2019 உலக கோப்பைக்கு இப்போதே திட்டமிட்டு தயாராக வேண்டும்.

எனவே அடுத்து வரும் ஆட்டங்களில் அணியில் மாற்றங்கள் இருக்கும், என்றார். இலங்கை கேப்டன் உபுல்தரங்கா கூறுகையில், தொடக்கம் சிறப்பாக அமைந்தும் அதனை பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டோம்.

300 ரன் எடுக்கலாம் என நினைத்தேன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதனை தவற விட்டு விட்டனர்.

ஒரு பேட்ஸ்மேனாவது நிலைத்து நின்று ஆடியிருக்க வேண்டும். தவறுகளை திருத்தி அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம், என்றார்.



ஆட்டநாயகன் ஷிகர் தவான் கூறுகையில், எனது திறமையின் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. கடவுள் அருளால் என் வாழ்வில் அனைத்தும் நன்றாக செல்கிறது.

சிறப்பாக செயல்படும் போது மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. 3 வித போட்டிகளிலும் பீல்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதற்கு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். இதில் அனைவரும் கவனம் செலுத்துகிறோம்.

நான் நன்றாக பேட்டிங் செய்ய விரும்புகிறேன். அது என் இலக்காக இருக்கும், ஏனென்றால் நான் செய்யாவிட்டால், எனது இடத்தில் மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள், யாரும் அந்த இடத்திற்கு செல்லலாம், என்றார்.


.

மூலக்கதை