சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்பைன் முகுருசா, டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றனர்: சிமோனா ஹாலெப், நிக் கைர்ஜியஸ் தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்பைன் முகுருசா, டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றனர்: சிமோனா ஹாலெப், நிக் கைர்ஜியஸ் தோல்வி

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்-ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில், உலகின் 11ம் நிலை வீரரான கிரிகோர் டிமிட்ரோவ், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில், 23ம் நிலை வீரரான நிக் கைர்ஜியஸை வீழ்த்தினார். கிரிகோர் டிமிட்ரோவ் வென்ற முதல் மாஸ்டர்ஸ் 1000 பட்டம் இதுவாகும்.

முன்னதாக கால் இறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தார் நிக் கைர்ஜியஸ்.

அந்த சிறப்பான பார்ம் தொடராததால், இறுதி போட்டி ஒன் சைடாக அமைந்து விட்டது.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், விம்பிள்டன் சாம்பியனான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா-ருமேனியாவின் சிமோனா ஹாலெப் மோதினர். இதில், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் கார்பைன் முகுருசா எளிதாக வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சிமோனா ஹாலெப் வென்றிருந்தால், டபிள்யூடிஏ தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருப்பார். ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காத கார்பைன் முகுருசா வெறும் 56 நிமிடங்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

சின்சினாட்டி ஓபனை கார்பைன் முகுருசா முதல் முறையாக கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை